சென்னை:புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ள நிலையில், கடலில் மீன்பிடிக்கச்சென்று கரைதிரும்பாத 210 படகுகளை மீட்க, கடலோர காவல்படையின் உதவியுடன், தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு, நவம்பர் 28ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு பகுதி வரும் டிசம்பர் 1, 2 ஆம் தேதிகளில் வடஇலங்கை வழியாக மன்னார் வளைகுடா கடற்பகுதியினை கடந்து குமரி கடல் வழியே அரபி கடலுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தென்தமிழகத்தின் இராமநாதபுரம், தூத்துக்குடி, மற்றும் குமரி மாவட்ட மீன்துறை இணை,துணை, உதவி இயக்குநர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு, மீனவர் கூட்டுறவு சங்கங்கள், ஆழ்கடல் மீன்பிடி ஒருங்கிணைப்பு சங்கங்கள் மற்றும், தேவாலயங்கள் மூலம் புயல் எச்சரிக்கை தகவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், நவ., 29ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஏற்கனவே ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக சென்றுள்ள விசைப்படகுகளை மீன்பிடித்துறைமுகங்கள்,மீன்பிடித்தளங்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செயற்கைக்கோள் தொலைப்பேசி, விஎச்எப் சாதனம் மூலம் தொடர்பு கொண்டு அங்கு திரும்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆழ்கடல் மீன்பிடி படகுகளை தொடர்பு கொண்டு அவற்றை பாதுகாப்பாக கரைதிரும்ப ஏதுவாக கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் (தொடர்பு எண்: 04651- 226235) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தில் (தொடர்பு எண்: 0461 – 2320458) 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகின்றன. மீன்வளத்துறை இயக்குநரக கட்டுப்பாட்டு அறையிலிருந்தும் (தொடர்பு எண்: 044-29530392) உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.