சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, லாக்-அப் மரணமடைந்த விக்னேஷ் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இதற்குப் பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”லாக்-அப் மரணமடைந்த விக்னேஷ் மரணம் தொடர்பான பிரச்னைக்கு ஏற்கெனவே பேரவையில் விளக்கம் அளித்துள்ளேன். மேலும் கடந்த ஏப்ரல் 19இல் விக்னேஷ் இறந்தார். கடந்த 24ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, மே 6ஆம் தேதி கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு 7ஆம் தேதி சம்மந்தபட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிபிசிஐடி விசாரணை முடிவின்படி அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
’சாத்தான்குளம் விவகாரத்தில் தந்தை மகன் கொலை விவகாரம் குறித்து, என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் எனவும், உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரிலேயே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது எனவும்; இந்த அரசு உங்களை போன்று (அதிமுக அரசை போன்று) குற்றவாளிகளை காப்பாற்றாது’ எனவும் சாடிய முதலமைச்சர் ஸ்டாலின் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம் என்று குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற லாக்கப் மரண வழக்குகள் எத்தனை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது எனவும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சாத்தான்குளம் வழக்கு நேர்மையாக நடைபெற்றது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Vignesh Lockup Death: 'விக்னேஷ் மரணவழக்கில் 15 நாட்களில் அறிக்கையினை சமர்ப்பிக்கவுள்ளோம்' - அருண் ஹெல்டர் தகவல்