சென்னை:நீதிமன்ற வழக்குகள் மீது உரியமுறையில் செயல்படாத அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதோடு புதிய வழக்குகளும் போடப்படுகின்றன. அந்த வழக்குகளில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர், இயக்குநர் ஆகியோர் சேர்க்கப்படுகின்றனர். இதனால் அவர்களும் நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டியுள்ளது.
இச்சூழலில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், ஆணையர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆகியோரை பிரதிவாதிகளாக சேர்த்த நீதிமன்ற வழக்குகள் தொடரப்படுகின்றன.
அதன் மீது உரிய அலுவலர்களும், பணியாளர்களும் உடனுக்குடன் ஆய்வு செய்து எதிர்வாதவுரை, மேல்முறையீடு, சீராய்வு மனு போன்றவற்றை தயார் செய்து உரிய காலத்தில் தாக்கல் செய்யாத காரணத்தால் அரசிற்கு நிர்வாக சிக்கல்கள் உருவாகும் நிலை ஏற்படுகிறது.
இதனால் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின் மீது உரிய மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அந்த அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வழக்குகளில் எந்த காரணம் கொண்டு தாமதப்படுத்தாமல் உரிய விதிகள், அரசாணைகளின் படி ஆய்வுசெய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பாணை கிடைக்கவில்லை எனக் காரணம் கூறி தாமதப்படுத்திடக்கூடாது. அவ்வாறு காலதாமதம் ஏற்படுத்தும் அலுவலர்கள் மீது விதிகளின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், துறைசார்ந்த வழக்குகளை விரைந்து முடித்திடும் வகையில், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், சட்டம் தெரிந்த ஒருவரை நியமித்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளார்.