தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சமூகமே நோய்வாய் பட்டிருப்பதை காட்டும், குழந்தைகள் மீதான பாலியல் வக்கிரங்கள்! - குழந்தை பாலியல் வன்கொடுமை

சென்னை: நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து அதிகரிக்கும் பாலியல் வக்கிரங்கள், மனிதர்களாக நாம் முன்னேறிய பரிணாமத்தின் மீதே பெருத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

abuse
abuse

By

Published : Oct 22, 2020, 5:28 PM IST

தாய்மொழி, தாய்நாடு, தாய்தெய்வம் என அனைத்திலும் பெண்ணை முன்னிறுத்தும் இந்த நாட்டில்தான், அப்பெண்ணிற்கு எதிரான குற்றங்களும் பெருகி வருகின்றன. உரிமைக்கோ, அவளது பாதுகாப்பிற்கோ துளியும் அக்கறையற்ற இச்சமூகம்தான் பாதிப்புக்கு ஆளான பின், அவளது உடை நாகரிகம் குறித்து பாடம் எடுக்கிறது. உடலை முழுவதும் மூடிய மூதாட்டி முதல் வெற்றுடம்பு பெண் சிசு வரை பாலியல் வக்கிரங்களுக்கு விதிவிலக்கல்ல. பெண்ணை சக உயிராக கருதாமல் வெறும் உடலாக மட்டுமே பார்க்கும் மனச்சிதைவு உள்ளோருக்கு, அவள் சிறுமி என்றால் என்ன? வயது முதிர்ந்தவள் என்றால் என்ன?

காஷ்மீரின் கத்துவா, உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ், சென்னை அமைந்தகரை, திண்டுக்கல் குறும்பட்டி, நாமக்கல் ராசிபுரம்... இப்படி இன்னும் எத்தனையோ ஊர்கள் இப்பட்டியலில் இருக்கின்றன. சிறுமிகளின் கூக்குரல் வெளி தெரிந்தவை இவை. இன்னும் எத்தனை எத்தனையோ குரல்கள் வெளியே தெரியாமலேயே மவுனமாகிப் போயுள்ளன, போகின்றன.

நிகழ்காலத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலினப்பெண் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி, படுபயங்கரமாக மனித மிருகங்களால் நாக்கு துண்டாக்கப்பட்டு, கழுத்து முறிக்கப்பட்டு கொல்லப்பட்டாள். அவளுக்கான நீதியைப்பெற அங்கு போராட்டம் ஒருபுறம் நடந்தாலும், அவளது வீட்டின்முன் நின்று பாலியல் குற்றவாளிகள் சார்ந்த ஆதிக்க சாதியினரின் பயமுறுத்தல்களும், கொலை மிரட்டல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மூதாட்டி முதல் சிசு வரை பாலியல் வக்கிரங்களுக்கு விதிவிலக்கல்ல...

என்றுமே ஆறாத அந்த ரணம் காய்வதற்குள், இங்கு நம் தமிழ்நாட்டின் ராசிபுரத்தை அடுத்த அணைபாளையத்தில், 12, 13 வயதுடைய இரண்டு சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதுவும் கடந்த 6 மாதங்களாக இக்கொடுமை நடந்தேறியுள்ளது. இக்கொடுஞ்செயலை செய்ததாக அதேப்பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் முதல் சிறுவன் வரை 7 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் நிகழ்வு இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை. அதற்குள் அடுத்தடுத்த அதிர்வுகளை இம்மண் பார்த்துக்கொண்டே வருகிறது. ஆளாக்குபவர்களை விட்டுவிட்டு ஆளானவர்களை அது தின்று செறித்தும் வருகிறது. பெண்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை சொல்லி கொடுப்பதை விட, ஆண்கள் பெண்களை எவ்வாறு சக உயிராக பார்க்க வேண்டும் என கற்றுக்கொடுத்தலே பாலியல் குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படுத்தும் என அறிவுறுத்துகின்றனர் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள்.

பாலியல் குற்றங்களை அரசியல்வாதிகள் சிலர் தங்கள் சாதி பார்த்து எதிர்ப்பது கொடூரமானது...

பாலியல் குற்றங்களில் மிகவும் குறைவானவர்களுக்கே கடும் தண்டனைகள் வழங்கப்படுவதாகக் கூறும் குழந்தைகள் உரிமை ஆர்வலர் விக்டர், கடுமையான தண்டனைகளை விட நிச்சயமான தண்டனைகளே குற்றங்களை குறைக்கும் என்கிறார். பெண்ணை விட ஆண் சிறார்களுக்கு சிறு வயது முதல் பாலினம் தொடர்பான புரிதலை பெற்றோர் ஏற்படுத்தவும் அவர் வலியுறுத்துகிறார். பாலியல் குற்றங்களை உடனடியாக எதிர்க்காமல், அரசியல்வாதிகள் சிலர் தங்கள் சாதி பார்த்து எதிர்ப்பது மிகமிகக் கண்டிக்கத்தக்கது என்றும் விக்டர் வேதனை தெரிவிக்கிறார்.

குழந்தைகள் மேல் நடக்கும் பாலியல் வக்கிரங்கள், இச்சமூகமே நோய் வாய் பட்டிருப்பதை காண்பிக்கிறது என்று கூறும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பக நிர்வாகி ஆண்ட்ரூ செசுராஜ், இது போன்ற குற்றங்களை தடுக்க உதவி எண்கள் பற்றிய விழிப்புணர்வை பரவலாக்க வேண்டும் எனவும், போக்சோ சட்டம் குறித்து பெற்றோர், குழந்தைகளிடம் அரசும், காவல்துறையும் விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.

போக்சோ சட்டம் குறித்து பெற்றோர், குழந்தைகளிடம் அரசு விளக்க வேண்டும்...

இப்படியான மனசாட்சியற்ற பெருங்குற்றங்கள் வெறும் சில நாட்கள் செய்திகளாகவும், இருவரி கண்டனங்களாகவுமே கடந்து கொண்டிருக்கின்றன. இதில் சட்டத்தை இயற்றுவோரின் பங்கும் மிகுதியானது. எனவே, வெறும் சட்டங்களால் மட்டும் மாற்றம் நிகழும் என்றில்லாமல் சமூக மாற்றமே முதன்மையானது என்பதை அறிந்து செயலாற்றுவதே பெண் குழந்தைகளை அதற்கே உரிய சுதந்திர மனநிலையுடன் வாழ வகை செய்யும்.

இதையும் படிங்க: அரசு பள்ளி ஆசிரியை, அவரது கணவர் போக்சோவில் கைது!

ABOUT THE AUTHOR

...view details