சென்னை: சேத்துப்பட்டு ஹாரிங்டன் 5ஆவது அவென்யூ சாலையைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் மூசா (80). இவர் சந்தன கடத்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் அக்.3ஆம் தேதி மதியம் ஈசிஆரில் உள்ள தனது மகன் பஷீர் வீட்டுக்குச் சென்றுவிட்டு சேத்துபட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரிடம் ஏற்கனவே பணியாற்றிய குமார் என்கிற அருப்பு குமார் உள்பட ஐந்து பேர் கொண்ட கும்பல், வீட்டு வாசல் அருகே அவரை காரில் கடத்தி போரூர் அழைத்துச் சென்றனர். அவர் காரில் வைத்திருந்த துப்பாக்கியை பயன்படுத்தியும் கையில் வைத்திருந்த கத்தியை வைத்து மிரட்டி கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக போரூரில் செட்டியார் அகரம் என்ற பகுதியிலுள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் போதையில் இருந்ததாக கைவிலங்கு போட்டு தொழிலதிபர் மூசாவை அடைத்து வைத்துள்ளனர். மூசா குடிபோதைக்கு அடிமையானவர் என கூறி , போதை மறுவாழ்வு மையத்தில் கட்டி போட்டு வைத்துள்ளனர்.
பேரம் பேசிய கடத்தல் கும்பல்
அதன் பின் மூசாவின் செல்போன் மூலம் அவரது மகன் பஷீருக்கு அழைப்பு விடுத்து 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். உடனடியாக இது குறித்து அவர் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் , சினிமாவில் வரும் கடத்தல் கும்பல் போல், பேரம் பேச ஆரம்பித்துள்ளனர்.
பின்னர், 3 கோடி, 2 கோடி, ஒரு கோடி, 50 லட்சம் எனப் படிப்படியாக குறைத்து இறுதியாக 25 லட்சம் தருமாறு மிரட்டியுள்ளனர். இதையடுத்து, பணத்தை எடுத்துக்கொண்டு திங்கள்கிழமை (அக்.04) தாம்பரம் அருகே வர கூறி போனை சுவிட்ச் ஆப் செய்தனர். இதனையடுத்து பஷீர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் தாம்பரத்திற்குச் சென்றனர்.
ஆனால் கடத்தல்காரர்கள் அங்கு வரவில்லை. இதனையடுத்து மீண்டும் மூசா செல்போனுக்கு முயற்சி செய்தபோது மூசாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, மூசாவின் செல்போன் டவர் மூலம் அவர் இருப்பிடத்தை காவல் துறையினர் தேடிவந்தனர்.
கடத்தல் கும்பலை விரட்டிப் பிடித்த காவலர்
இந்நிலையில், நேற்று (அக்.05) மீண்டும் மூசாவின் செல்போனில் இருந்து போன் செய்த கடத்தல்காரர்கள் எழும்பூர் அல்சா மால் அருகே 25 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வரச்சொல்லி கூறியுள்ளனர். இதனையடுத்து 25 லட்சம் ரூபாய் பணத்துடன் காவல் துறையினரும், பஷீரும் எழும்பூர் அல்சா மால் அருகே தயாராக இருந்தனர்.