இதுகுறித்து ஆவின் நிர்வாகம் கூறியதாவது, “ஆவின் தமிழ்நாட்டு மக்கள் வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எவ்வளவு இடர்பாடு காலத்திலும் பாலை உங்களுடைய இல்லம் தேடி சேர்ப்பது தலையாய கடமையாக நினைத்து நாங்கள் அதை செய்துகொண்டிருக்கிறோம்.
நீங்கள் இரவில் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கும் போது, நாங்கள் அதே வேளையில் இரவில் கடுமையாக உழைத்து பாலை பாக்கெட்டில் அடைத்து அதிகாலை ஐந்து மணிக்குள் பாலை உங்கள் இல்லங்களில் சேர்ப்பதற்கு நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில், கரோனா நோய் தொற்று தடுப்பு நெருக்கடி காலத்தில் பெரும்பாலான முதன்மை தனியார் பால் பண்ணைகள் தங்களது செயல்பாடுகள் முடக்கிவிட்ட நிலையிலும், தற்போது ஆவின் நிறுவனம் மே 31ஆம் தேதியன்று அதிகபட்சமாக 37.24 லட்சம் லிட்டர் பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 2ஆம் தேதியன்று 24.78 லட்சம் லிட்டர் ஆவின் பால் மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறை, மருத்துவர்கள் போல ஆவின் தொழிலாளர்கள், அலுவலர்களும் ஒரு முன்னிலை போராளியாக இருந்து, இந்த கரோனா தொற்றை எதிர்த்து போராடிக்கொண்டு மக்களுக்கு ஒரு தரமான பாலை, இன்றியமையாத பாலை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வழங்க போராடிக்கொண்டிருக்கிறோம்.
இந்த காலக்கட்டத்தில் எங்களுடைய உற்சாகத்தை குலைக்கும் வண்ணம் சில தவறான செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. மாதவரத்தில் 250 தொழிலாளர்களுக்கு கரோனோ தொற்று வந்து விட்டது என்ற பொய்யான செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. இந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
இது போன்ற பொய்யான செய்திகள் எங்களுடைய தொழில் போட்டியாளர்கள், குழப்பத்தை விளைவிக்கும் சமூக விரோதிகளால் தவறான வதந்திகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இது முற்றிலும் தவறான செய்தி. அத்தனை தொழிலாளர்களுக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை.