தஞ்சாவூர்: ஆடுதுறை பேரூராட்சி மறைமுக தேர்தலின்போது, திமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாக கூட்டணி கட்சியினர் ரகளையில் ஈடுபட்டதால், தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. காவலர்கள் பாதுகாப்புடன், தாமதமின்றி மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அவர்களின் மனுவில், 'மறைமுக தேர்தல் நாளன்று மூன்று திமுக உறுப்பினர்கள் வராததால், கூட்டணி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வேட்புமனுக்களை பறித்து, கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டதால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். பொய் வழக்கில் தங்களை சிறையில் அடைத்துவிட்டு மறைமுக தேர்தல் நடத்த இருக்கின்றனர்' என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, மறைமுக தேர்தல் நாளன்று எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நேற்று(மார்ச் 15) விசாரணைக்கு வந்தபோது, வீடியோ பதிவுகளை மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது.