தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆடிப்பெருக்கு மதப்பண்டிகையா? - மக்கள் பண்டிகையா? - ponni nadhi first single

ஆடிப்பெருக்கிற்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை விளக்கமளித்து வெளியிட்டுள்ள அறிக்கைக்கு, தமிழ் ஆர்வலர்கள் பலர் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இச்சிறப்பு தொகுப்பில் காணலாம்.

இந்து சமய அறநிலையத்துறையின் விளக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் தமிழ் ஆர்வளர்கள்
இந்து சமய அறநிலையத்துறையின் விளக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் தமிழ் ஆர்வளர்கள்

By

Published : Aug 2, 2022, 5:20 PM IST

Updated : Aug 2, 2022, 6:01 PM IST

சென்னை: ஆடிப்பெருக்கு தினம் நாளை (ஆகஸ்ட் 3) தமிழ்நாட்டில் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

'ஆடிப் பதினெட்டு விழா செல்வத்துக்கு அதிபதியான குபேரனின் மகள் தான் காவிரி. இவளது கர்வத்தை அடக்க எண்ணிய அகத்திய மாமுனிவர் காவிரியைத் தன் கமண்டலத்திற்குள் அடைத்தார். காக்கை உருவில் வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து காவிரியை மக்கள் நன்மைக்காக ஓடச்செய்தார், விநாயகர்.

இந்து சமய அறநிலையத்துறையின் அறிக்கை

காவிரி பாயும் மாவட்டங்களில் காவிரியைத்தாயாக நினைத்து அன்னை கர்ப்பமாக இருப்பதாகவும்; கர்ப்பஸ்திரீக்கு பிடித்த அறுசுவை கொண்ட, 1.சாம்பார் சாதம் ; 2.புளியோதரை , 3.கற்கண்டு சாதம் ; 4.தேங்காய் சாதம் ; 5.எலுமிச்சை சாதம் ; 6.தயிர் சாதம் போன்ற அன்னங்களை மூத்த சுமங்கலிகள் கொண்டு வருவர்.

காவிரி ஆற்றில் குளித்த பின்னர் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, மண்ணை உருண்டையாகப் பிடித்து காவிரி அன்னையை எண்ணி சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரிப்பர். பின்னர் அன்னங்கள், காதோலை, கருகமணி மாலை, பூ, பொட்டு, தாலிக்கயிறு, கரும்பு, வாழைப்பழம் வைத்து பூசை செய்து தோத்திரங்கள் பாடி தூபம், தீபம் காண்பித்து பூசையினை முடிப்பார்கள். இதனால் குடும்ப உறவு பலப்படும், குடும்பம் செழித்து வளரும்’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆடிப்பெருக்கு என்பது தமிழர்களின் உழவு சார்ந்த திருவிழா, இந்து அறநிலையத்துறை சார்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தைத்தெரிவித்துள்ளனர். மேலும் தமிழர்களின் பண்பாட்டை சிதைக்கும் வண்ணம் இது உள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து சிறப்புத்தொகுப்பில் காணலாம்.

கல்கியின் பொன்னியின் செல்வனில் ஆடிப்பெருக்கு:ஆடிப்பெருக்குத் திருநாளில், கடல்போல் பரந்து விரிந்திருக்கும் வீராணம் ஏரி. அதன் கரையில் வந்தியத்தேவனோடு பொன்னியின் செல்வனின் கதைத் தொடங்க, அந்தக் கணத்திலிருந்து நாமும் சோழர்காலத்துக்குள் அவனோடு பயணிக்கத்தொடங்கிவிடுவோம்.

பொன்னியின் செல்வன் கதையில் வீராணம் ஏரி கரையோரத்தில் வந்தியத்தேவன் தன்னுடைய குதிரையில் வரும்போது, மக்கள் யாவரும் கூடி புதுநீரை வரவேற்கும் காட்சியை காணும்போது அவர் சிலாகித்துப்போனான். அங்கு வந்தியத்தேவன் சற்று நின்று ஓய்வெடுத்துகொண்டிருக்கும்போது மக்கள் மகிழ்ச்சியோடு ஆடிப்பெருக்கு திருவிழாவை கொண்டாடியுள்ளனர். இப்படியாக பொன்னியின்செல்வன் கதை தொடங்குகிறது.

ஆடிப்பெருக்கு மதப்பண்டிகையா?: ’ஏற்கெனவே பொய்யை நம் மீது திணித்து திணித்துதான் நம் சிந்தனை மரபையே சிதைத்து வைத்துள்ளார்கள். ஆடிப்பெருக்கு மதப்பண்டிகையா?’ என்கிறார் கவிஞர் கரிகாலன்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 'ஆடிப்பெருக்கு விழா குறித்து தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்தக்குறிப்பு, ஆடிப்பெருக்கை இந்துமதப் பண்டிகையாகவும், காவிரியை, சரஸ்வதி நதியைப்போல் ஒரு புராண நதியாகவும் சித்தரிக்கிறது. தமிழர் தம் வாழ்வியலுக்கும் இலக்கணம் கண்டவர்கள்.

அவர்கள் மீது எண்ணற்ற பண்பாட்டுத் தாக்குதல்கள். இத்தாக்குதல்கள் அவர்களது பண்டிகைகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்கள் தீபமேற்றி கொண்டாடியதை தீபாவளி, கார்த்திகை தீபம் என்றார்கள். அதுபோலவே ஆடிப் புதுவெள்ளத்தில் அவர்கள் மகிழ்ந்ததே ஆடிப்பெருக்கு. வழக்கம்போல் அதை மகாபாரதத்துடன் இணைத்து கதை கட்டினார்கள்.

ஆடிப்பெருக்கு என்பது ஆற்றில் வருகிற புது நீரை தமிழ்க்குடிகள் வரவேற்கிற நிகழ்வு. பரதவர், கோசர், ஆவியர், ஓவியர், ஆயர், வேளிர், ஆண்டார், வில்லோர், மறவர், மழவர், கொங்கர், குறவர், மலையர், குடவர், புலியர், புலையர், கடம்பர், கள்வர் உள்ளிட்ட பதினெண் குடிகள் கொண்டாடுகிற பண்டிகை என்பதால் 'பதினெட்டாம் பெருக்கு' என்றும் அழைப்பதுண்டு.

ஆடியில் பெருகிய நீர்நிலைகளை வழிபட்டதாலும் அது ஆடிப்பெருக்கு! ஒரு இனத்தை அழிப்பதற்கு அதன் பெருமிதமான நினைவுகளை அழிக்கிறது, அதிகாரம். இந்த வகையில்தான் நாம் ஆடிப்பெருக்கை வரவேற்க வேண்டும். எமது பால்ய பருவத்தில் சிறுதேரோட்டி, இவ்விழா நாளில்தான் அன்னப்பறவைகள் போல வெள்ளாற்றை நோக்கி நாங்கள் நடந்தோம்.

எங்கள் கைகளில் வெல்லத்தோடு பிசைந்த பச்சரிசி அலுமினியத் தூக்கில் இனித்தது. கோடை தணிந்து வயல்களில் புது நடவு, பச்சைகட்டி கண்களுக்கு விருந்தளிக்கும். வயற்காடெங்கும் பூத்திருந்த வெண்ணிறக் குருகுகள் உழுகுடியின் வளம்பாடும். கண்களில் காதல் வழிய கனவுகள் நிறைவேறிய இன்பக்கதைகளைப் பேசியபடி எம்முடன் புதுமணமானவர்கள் வருவார்கள்.

தமிழ் இலக்கியங்களில் ஆடிப்பெருக்கு:தாங்கள் மாற்றிக்கொண்ட மாலைகளை ஆற்றின் பெருக்கில் விட்டு தம்குடி பெருக வேண்டுவர். மண்சட்டிகளில் கொண்டுவந்த முளைப்பாரியை நீரில் விட்டு கருவுற வேண்டியும் நிலத்தில் மகசூல் பெருகவும் வேண்டுவர். இயற்கையன்னையிடம் வேளாண்குடிகள் வைக்கும் அர்த்தம் நிறைந்த பிரார்த்தனைகளவை.

'வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்குஏகினும் தற்பாடிய தளியுணவின் புள்தேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி' காவிரி குடகுமலையில் தோன்றுவதை இப்படி, தெளிவாகப் பாடுகிறது, பட்டினப்பாலை.

'புனிறு திர்குழவிக்கிலிருந்து பசும் பயிறுவளர்த்து பொன்கதிருக
ஆக்குபொன் கொழிக்கும் காவேரியே' எனப் புறநானூறும்,

'புனலாடு மகளிற்கதுமெனக் குடைய
சூடு கோடாக பிறக்கி நாடொறுங்
குன்றெனக்குவை இயக்குன்றாக் குப்பை
சாலிநெல்லின் சிறை கொள்வேலி
காவேரிபுரக்கு நாடுகிழவோனே' என பத்துப்பாட்டும்,

'உழவ ரோதை மதகோதை உடைநீ ரோதை தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி...மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துக் கருங்கயற்கண் விழத்தெல்கி நடந்தாய் வாழி காவேரி' என சிலப்பதிகாரமும் போற்றிய காவிரியின் கரையெங்கும் தமிழர் நிறைந்து கொண்டாடும் திருநாளே ஆடிப்பெருக்கு.

தமிழ்நாடு அரசின் ஆடிப்பெருக்கு விளக்கம்:ஆனால், தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறையோ, 'செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் கஞ்சவேட்கையிற் ‘காந்தமன்’ வேண்ட அமரமுனிவன் அகத்தியன் தனது கரகம் கவிழ்த்த காவிரிப்பாவை பொங்கு நீர்பரப்பப் பொருந்தித்தோன்ற' என மணிமேகலை கூறிய புராணிகக் கதையை காவிரியின் தோற்றமாக சித்தரிக்கிறது.

குபேரன் மகள் காவிரியை இன்று மணல் வியாபாரிகள் கொள்ளையடித்து பாலையாக்கியிருக்கிறார்கள். தற்கொலை செய்த டெல்டா உழுகுடிகளின் பிணங்கள் காவிரிக்கரைகளில் புதைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் காவிரியை, ஆடிப்பெருக்கை, இந்து மதத்தோடு இணைத்து புனிதப்படுத்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. கன்னட காவிரிக்கரை பகுதிகளில் சமணம் தழைத்திருந்தது.

தமிழ்நாடு காவிரிக்கரை நாகரிகத்தில் பரவிக்கிடந்ததும் இந்து பண்பாடு அன்று. நாட்டார் வழக்காறுகளும், சைவ, பௌத்த, சமணப்பண்பாடுகளுமே விரவிக் கிடந்தன. இத்தகைய பன்முகப்பண்பாட்டு அடையாளமே ஆடிப்பெருக்கு. இதை இந்து மதப் பண்டிகையாகச் சித்தரிக்கும் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையின் செயல் கண்டனத்துக்குரியது’ என்கின்றார், கவிஞர் கரிகாலன்.

மனுதர்ம நடவடிக்கையை ஒழிப்பதற்காகத் தான் இந்தியச்சட்டம்:இதுகுறித்து நம்மிடம் தொலைபேசி வாயிலாக பேசிய பேராசிரியர் லெனின், ‘ இந்து பண்பாடு என ஒன்று கிடையாது, இந்து மதம் என்பது கிடையாது, இவையெல்லாம் சித்தரிக்கப்பட்டவை தான். ஆங்கிலேயர் காலத்தில் நிர்வாக வசதிக்காக, மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இந்துகள் எனப் பிரிக்கப்பட்டனர்.

1841ஆம் ஆண்டு அயோத்திதாச பண்டிதர், 'எங்களை இந்துகள் என்று அழைக்காதீர்கள்; நாங்கள் பூர்வ பௌத்தர்கள், பௌத்தர்கள் என்று தான் கருத வேண்டும்' என ஆங்கிலேயருக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

ஆங்கிலேயர் காலத்தில் சைவ மதம், வைணவ மதம், இப்படியாக பல்வேறு விதமான வழிபாட்டு மக்கள் இருந்தனர். இதனை ஆங்கிலேயர் புரிந்துகொள்ள முடியாத நிலையில், நிர்வாக வசதிக்காக இந்துகள் என அடையாளப்படுத்தப்பட்டனர். கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமியருக்கு இந்தியச்சட்டத்தின்படி சட்டங்கள் வகுக்கப்பட்டன.

ஆனால், இந்துக்களுக்கு என்று தனியாக சட்டம் இயற்ற முடியாத சூழ்நிலையில், பொதுவான சட்டத்தை உருவாக்கினர். மனுதர்மம் நடைமுறை தான் இருந்து வந்த நிலையில், இது ஒரு சமூக அபத்தம் என்று உணர்ந்த ஆங்கிலேயர்கள் குற்றத்தின் தன்மை கருதி தான் நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமே தவிர, குற்றவாளியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பது நீதியே கிடையாது என்பதில் உறுதியாக இருந்தனர்.

இந்து பண்டிகையாக கொண்டாடப்படுகின்ற எந்த பண்டிகையும் இந்து பண்டிகை அல்ல. இந்து என்ற மதமோ வரையறுக்கப்பட்ட வாழ்க்கை முறையோ இல்லை. ஒவ்வொருவருக்கும் பண்பாட்டு முறை மற்றும் வழிபாடு முறை வெவ்வேறாகவே இருக்கிறது. இந்துகளில் சாதி முறைப்படி பல்வேறு திருமணங்கள் பல்வேறு வகையில் நடந்து வருகின்றன. மேலும் உயர்சாதி என்று கூறக்கூடியவர்கள், மாற்று சாதியில் பெண் எடுப்பது கிடையாது.

ஒவ்வொரு விழாக்களையும் நாம் தத்துவ ரீதியாகவும் கொண்டாடி வருகிறோம்:இந்து என்ற ஒரு மதத்தை உருவாக்கி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உயர்வுக்காக அரசியல் கட்சிகள் பிழைப்பு நடத்துகின்றனர். ஒவ்வொரு விழாக்களையும் நாம் தத்துவ ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் கொண்டாடி வருகிறோம். விளக்கு ஏற்றுவதில் இருந்து நாம் மூட நம்பிக்கை வைத்து கொண்டாடவில்லை. ஆடிப்பெருக்கு என்பதை 'புதுபுனல் ஆடுவத' என்பர்.

இந்து மதத்திற்கான விழாவே அல்ல 'ஆடிப்பெருக்கு'. தமிழர்களின் 'மரபு விழா' இது. தங்களின் அரசின் பிழைப்புக்காக மக்களிடையே மதவாதத்தைத் தூண்டுவதற்காகவும், போலியாக சித்தரிக்கிறார்கள். தீபாவளிப்பண்டிகையை, எப்படி இந்து பண்டிகை ஆக்கினார்களோ, அதுமட்டுமின்றி அதற்கு ஒரு ஆபாசமான புராணக்கதையை உருவாக்கினார்கள். இதேபோல பல்வேறு இந்து பண்டிகைகளை உருவாக்கி வைத்துள்ளனர்.

விளக்கெண்ணெயினை கண்டுபிடித்தவர்கள் பௌத்தர்கள், விளக்கெண்ணெயினை பயன்படுத்தி தீபம் ஏற்றுவதால் கெடுதல் எதுவும் வராது அதுதான் 'தீபாவளி'. வரலாற்றுப் பூர்வமான விழாக்கள் தான் நாம் எடுத்து வந்தது. அரசு இயந்திரத்தை கடந்த 10 ஆண்டுகளில் சனாதான சக்திகள் கைப்பற்றியுள்ளனர்.

ஆடிப்பெருக்கு என்பது தமிழர்களின் உழவு சார்ந்த திருவிழா. மேலும் மனுதர்மத்தில் விவசாயம் செய்வது பாவம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் உயர் வகுப்பினர் என்று சொல்லிக் கொள்பவர் எவ்வாறு நெய், பருப்பு உண்ண முடியும்?

உலகில் சிறந்த தொழில் உழவுத்தொழில் என்னும் திருவள்ளுவர்:மேலும் திருவள்ளுவர் இதனை, தொழிலும் சிறந்த தொழில் என உழவுத்தொழிலை சிறப்பாக குறிப்பிடுகிறார். ஆனால், சிலர் அதனை பண்பாட்டு சீரழிவாக கருதுகின்றனர். மேலும் அவர்கள் காலங்காலமாக பிறருடைய பண்டிகைகளை தங்களுடைய பண்டிகை என்று கூறி வருகின்றனர். பௌத்தர்கள், அந்தணர் என்றும் பூணூல் அணிந்து சான்றோர் ஆக இருந்தனர். ஆனால், இதனை பிராமணர்கள் தங்களுக்கு என்று உரித்தாக்கிக்கொண்டனர்.

அவர்களை 'வேஷ பிராமணர்கள்' என அயோத்திதாசர் குறிப்பிடுகிறார். இந்து சமய அறநிலையத்துறை சார்ந்தவர்களுக்கு தமிழ் பண்பாட்டு, வரலாற்று அடிப்படையில் மதத்தைப்பார்க்க வேண்டும். அவர்களுக்கு பயிற்சி தேவை இருக்கிறது. இவர்களுக்கு வரலாறு என்பதும் புனையப்பட்ட கதை என்பதும் தெரியவில்லை.

வரலாற்றுக்கும், யதார்த்தத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதனைப்புரிந்து கொண்டால், இந்த மாதிரியான சிக்கல்கள் வராது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தொடரும் மர்ம மரணங்கள்.. உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள் - தீர்வு என்ன?

Last Updated : Aug 2, 2022, 6:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details