சென்னை:பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(22). இந்த நிலையில் நேற்று(அக்.10) அவரின் பிறந்த நாளில் தான் ஏற்கனவே காவல்துறை வாகனத்தின் அருகே நின்று எடுத்து வைத்த வீடியோவுடன் இணைத்து,புதிதாக கையில் பெரிய அளவிலான பட்டா கத்தியை பிடித்து நிற்பது போன்ற வீடியோக்களை தனது இண்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
இவர் பதிவு செய்த வீடியோக்களை கண்டு பகுதிவாசிகள் பயந்தார்களோ, இல்லையோ சங்கர் நகர் காவல்துறையினர் கதிகலங்கித் தான் போயினர். தங்களுக்கே தெரியாமல் தங்களது காவல்துறை வாகனத்தில், நின்றவாறு பட்டா கத்தியை காட்டி வீடியோ பதிவிட்ட அந்த ரவுடி இளைஞர் கோபாலகிருஷ்ணனை தேடி அவரது வீட்டிற்கு சென்றனர்.
அவரைப்பிடித்து விசாரித்ததில் வீடியோ எடுத்ததற்கான காரணங்களை அடுக்கத் தொடங்கினார். ஒழுங்காக படிக்காமல் , வேலைக்கும் செல்லாமல் தினமும் ஊர் சுற்றி வந்ததாகவும், இதனால் இவரது தெருவில் வசிக்கும் சக வயதினர் உள்ளிட்ட யாரும் இவரை மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் தான் ஒல்லியாக இருப்பதனால் தான் தன்னை யாரும் மதிக்கவில்லை. எனவே எப்படியாவது பெரிய ரவுடியாக வலம் வர வேண்டும். அப்பொழுது தான் இந்த ஊரே தன்னை கண்டால் நடுங்கும் என்று இளைஞர் கோபாலகிருஷ்ணன் நினைத்து, அதற்காக காவல்துறையினர் தங்களது வாகனங்களில் ரோந்து வந்து செல்லும் இடங்களை ரகசியமாக நோட்டமிட தொடங்கியுள்ளார்.