சென்னை, காசிமேடு, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி (வயது 31). இவர் அதே பகுதியில் உள்ள மாதா நர்சரி பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். முன்னதாக 2016 ஆம் ஆண்டு அப்பள்ளியின் விரிவாக்கப் பணிக்காக, பள்ளி தாளாளர் கார்த்திக் (எ) பிரேம்நாத் ஸ்ரீமதியிடம் 27 சவரன் தங்க நகைகளைக் கடனாக வாங்கியுள்ளார்.
ஆனால், பள்ளியை விரிவாக்கம் செய்யாமல் தாளாளர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில், இன்று (நவ.24) ஸ்ரீமதி தனது அண்ணன் முத்துக்குமாருடன் தாளாளர் கார்த்திக் வீட்டிற்குச் சென்று தனது நகைகளைத் திருப்பியளிக்கும்படி கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றவே ஆத்திரமடைந்த தாளாளர் கார்த்திக், தனது வளர்ப்புப் பிராணியான லேபர் இனத்தைச் சேர்ந்த நாயை அவர் மீது ஏவி விட்டுக் கடிக்க வைத்துள்ளார்.
இதில், ஆசிரியரின் முகம், கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டநிலையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைகாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.