சென்னை: இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. முந்தைய ஆட்சியாளர்களால் கடந்த 25.2.2021 அன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கடந்த 3.8.2021 அன்று வழங்கிய தீர்ப்பில், இச்சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதனை ரத்து செய்தது. மேலும், இச்சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது, அச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல்பூர்வமான தரவுகளை விளக்கத் தவறியதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.
சட்டம் ரத்து:சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 13.11.2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
உயிரிழக்கும் இளைஞர்கள்: இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று (ஜூன் 9) நடைபெற்றது.