சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் உள்ள குறைகள், நிறைகளை கண்டறிவதற்காக 100 நாள்களில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளை, சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வில்லிங்டன் பள்ளியில், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து வகுப்பறைகள், கழிவறைகள், கட்டடிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பாடபுத்தகங்களையும் ,விளையாட்டு உபரகணங்களையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பள்ளி விளையாட்டு திடலில் மகிழமரம், ஏழிதழ்பாளை ஆகிய மரகன்றுகளை நட்டு வைத்தார்.
பள்ளிக்கல்வித்துறையில் 234/77 என்ற திட்டத்தினை தொடக்கி வைத்து விளக்க உரையாற்றிய
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேரடியாக செல்ல வேண்டும் என்கிற நோக்கில், பள்ளிகளில் என்னென்ன தேவைகள் உள்ளதோ அவற்றை சரிசெய்ய வேண்டும்.
234 தொகுதி என சொல்லும் போது பள்ளியின் கட்டமைப்பு மட்டுமல்லாமல் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை சுகாதாரம் , மாணவர்களின் ஆரோக்கியம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளோம். மேலும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்தவகையில் பள்ளிகளை சென்று சேர்ந்திருக்கிறது என்பது பற்றிய விவரங்கள் கேட்கப்படும்.
ஒவ்வொரு பள்ளியையும் ஆய்வு செய்ய வேண்டும் காலை உணவு திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்ய உள்ளோம். முதல் தொகுதியாக திருவல்லிக்கேணியில் தொடங்கி 100 நாள்களில் ஆய்வு செய்து, 234 ஆவது தொகுதியாக கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை முதலமைச்சரிடம் அளிக்க உள்ளோம் எனவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், “100 நாள்கள் தொடர்ந்து ஆய்வு செய்து தொகுதிக்கு ஒரு அரசு பள்ளியில் 77 கூறுகள், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். தொகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
ஒவ்வொரு பள்ளியையும் ஆய்வு செய்ய வேண்டும் நம் பள்ளி நம் பெருமை திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், தகைசால் பள்ளி திட்டம் , மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு உபகரணங்கள் வழங்கும் திட்டம், சிற்பி திட்டம் என மாணவர்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் கூறியது போல், மாணவர்கள் எதை பற்றியும் கவலை படாமல் பள்ளிக்கு வந்து படிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:எல்கேஜி யுகேஜி வகுப்புகளை நடத்த தன்னார்வலர்கள் நியமனம் - அமைச்சர் அன்பில்மகேஷ்