சென்னை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் மன்னங்கோயில் கிராமத்திலுள்ள மன்னார்சாமி-நல்லகாத்தாயி கோயிலுக்குச் சொந்தமான ஸ்ரீநல்லகாத்தாயி அம்மன், ஸ்ரீ கஞ்சமலையீஸ்வரர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ விநாயகர் ஆகிய 4 சிலைகள் 40 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் இருந்து திருடப்பட்டுவிட்டதாகவும், உடனடியாக கண்டுபிடித்துத் தரக்கோரி ஏனாக்குடி கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்பவர் சென்னை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரின் பேரில், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் தனிப்படை அமைத்துக் காணாமல் போன சிலைகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக, சீர்காழி அருகே நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த குருக்கள் சூர்யமூர்த்தி என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
சிலையோடு சிலையாக மறைப்பு
விசாரணையில், நெம்மேலி விசாலாட்சி-விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள விசாலாட்சி அம்மன் சிலைக்குப் பின்புறம் பிரதோஷ நாயக பிரதோஷ நாயகி உலோகச்சிலை மறைத்து வைக்கப்பட்டிருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.