நடிகையாக இருந்த குஷ்பூவைச் சுற்றி 2005ஆம் ஆண்டு சர்ச்சை சிறகு விரிந்தது. எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து அந்த ஆண்டு ஒரு பத்திரிகைக்கு குஷ்பூ அளித்த பேட்டியில்,
பெண்கள் திருமணத்துக்கு முன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை. ஆனால் உறவில் ஈடுபடும்போது உரிய பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும் என்று அவர் கூறினார்.
இதனையடுத்து அவருக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன. நிலைமை விபரீதமானதை உணர்ந்த குஷ்பூ தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்
இதற்கிடையே, ஜெயா தொலைக்காட்சியில் ஜாக்பாட் நிகழ்ச்சியை குஷ்பூ தொகுத்து வழங்கியதால், அவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆதரவாளர் எனவும், அவர் அதிமுகவில் விரைவில் இணைய இருக்கிறார் எனவும் அப்போது பேச்சு அடிபட்டது.
அதேசமயம், கற்பு குறித்த கருத்தால் எழுந்த பிரச்னையைத் தொடர்ந்து, தான்அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதாகவும், காங்கிரஸை மிகவும் பிடிக்கும் எனவும், ராஜீவ் காந்தி படத்தை எனது பெட்ரூமில் வைத்திருப்பேன் என்றும் கூறியதால் அவர் காங்கிரஸில் இணைவார் என கூறப்பட்டது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காதவகையில், 2010ஆம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார் குஷ்பூ. தொடர்ந்து திமுகவில் இயங்கிவந்த அவர், திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் என முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்று 2013ஆம் ஆண்டு அவர் பேசியதை அடுத்து அவரை திமுகவினர் திருச்சியில் தாக்கினர். சென்னையில் அவர் வீடு மீதும் தாக்குதல் நடந்தது.
இதனால் விரக்தியடைந்த குஷ்பூ 2014ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது.
இருப்பினும், தமிழ்நாடு காங்கிரஸில் நிலவிவந்த கோஷ்டி பூசலில், அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளராக குஷ்பூ கருதப்பட்டார்.
இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை நக்மாவுக்கு தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் சில காலங்களில் நக்மா அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். நக்மா அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு குஷ்பூதான் காரணம் என பேசப்பட்டது.
மேலும், 2016ஆம் நடந்த மக்களவைத் தேர்தலிலோ, சட்டப்பேரவைத் தேர்தலிலோ போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. இருப்பினும் காங்கிரஸில் தொடர்ந்து இயங்கிவந்த குஷ்பூ, தனது கருத்துகளை வெளிப்படையாகக் கூறிவந்தார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க மறுத்ததும், சச்சின் பைலட் போன்றவர்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கலாம் என்று அவர் கூறிய கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரால் குஷ்பு புறக்கணிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டது. இருப்பினும் அவர் மௌனம் சாதித்து வந்தார்.
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தது, காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துவரும் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது என அவரது செயல்பாடுகளால் அவர் பாஜகவில் இணையவிருக்கிறார் என தகவல் வெளியானது.
ஆனால், தான் பாஜகவில் இணையவிருப்பதாக இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு சிலர் கூறுகிறார்கள் என குஷ்பூ தெரிவித்தார். எனவே காங்கிரஸிலிருந்து விலகும் எண்ணம் அவருக்கு இல்லை என அக்கட்சியினரால் கருதப்பட்டது.
இந்த சூழலில், பாஜகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகிறதே என்றும் காங்கிரஸில் இருக்கிறீர்களா என்றும் செய்தியாளர்கள் குஷ்பூவிடம் கேட்ட கேள்விக்கு, நோ கமெண்ட்ஸ் என்று சொல்லிவிட்டு டெல்லிக்கு சென்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்துகுஷ்பூநீக்கப்படுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனையடுத்து,அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு குஷ்பூ கடிதம் அனுப்பினார். இதனால், பாஜகவில் அவர் இணைய இருப்பது உறுதியானது.
கடந்த பத்து ஆண்டுகளில் மாநில அளவில் பெரிய கட்சியான திமுகவிலும், தேசிய அளவில் பெரிய கட்சியான காங்கிரஸிலும் இருந்த குஷ்பூ தனது கருத்தை வெளிப்படையாகப் பேசியதால் பல பிரச்னைகளைச் சந்தித்தார்.
தற்போது பாஜகவில் அவர் இணையும் பட்சத்தில் அவருக்கான முக்கியத்துவம் அக்கட்சியில் எப்படி இருக்கும். முற்போக்கு சிந்தனாவாதியான குஷ்பூ அங்கும் தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பாரா. அவரது அரசியல் பயணம் பாஜகவிலாவது சுமுகமா இருக்குமா என்ற பல கேள்விகள் குஷ்பூவை சுற்றி எழுந்துள்ளன.