சென்னை: தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் காவல் பதக்கங்கள், அந்தந்த நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு சென்னை காவல்துறையில் 10 ஆண்டுகள் எவ்வித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரிந்த சட்ட ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையங்களில் பணிபுரியும் 210 காவலர்கள், போக்குவரத்து காவலில் பணிபுரியும் 148 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதப்படையில் பணிபுரியும் 73 காவலர்கள், நுண்ணறிவுப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டறை, சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு, உயர் நீதிமன்ற பாதுகாப்பு காவல் பிரிவு, குற்ற ஆவண காப்பகம், பணியிடை பயிற்சி மையம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 99 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதர பிரிவுகளான இரயில்வே, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் செயலாக்கம் ஆகிய காவல் பிரிவுகளில் பணிபுரியும் 18 காவலர்கள் என மொத்தம் 548 ஆண் மற்றும் பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த பதக்கங்களை (செப்.16) எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்தில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். முன்னதாக காவல் அணிவகுப்பு நடத்தப்பட்டது.