சென்னை: மேற்கு தாம்பரம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த தம்பதி கோகுல் (26), யாஸ்மின் (25). கோகுல் கடந்த சில வருடங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அவரது மனைவி யாஸ்மின் குரோம்பேட்டையில் உள்ள துணி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு கோகுலின் வீட்டிற்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் கோகுலிடம் பேச வேண்டும் எனக்கூறி அவரை வெளியே அழைத்துள்ளனர். வெளியே வந்ததும் மறைந்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் ஓட ஓட விரட்டி அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதில் தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்த கோகுல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாம்பரம் காவல் துறையினர் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் கோகுலை வெட்டியது தாம்பரத்தைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்களான அருண்ராஜ், ஜெய்கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் என்பது தெரியவந்தது. உடனே தனிப்படை அமைத்த காவல் துறையினர், விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்தன.
காவல் துறையினரால் பிடிக்கப்பட்ட விஜயகுமாரும் தாக்குதலுக்கு உள்ளான கோகுலின் மனைவி யாஸ்மினும் 11ஆம் வகுப்பில் ஒன்றாக படித்தவர்கள். அப்போது இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது காதல் விவகாரம், யாஸ்மினின் வீட்டிற்குத் தெரியவர கடும் எதிர்ப்பு கிளம்பியது. உடனே சையது என்பவருக்கு யாஸ்மினை திருமணம் செய்து கொடுத்தனர்.
அமைதியாக சென்ற அவர்களின் திருமண வாழ்க்கையில் இரண்டு குழந்தைகளும் பிறந்தது. இருந்தும் யாஸ்மின் விஜயகுமாருடனான உறவை துண்டிக்கவில்லை. அது சையதுக்குத் தெரியவர குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது. அதில் கணவனை பிரிந்த யாஸ்மின் விஜயகுமாருடன் ஒன்று சேர்ந்தார். இருவரும் கணவன் மனைவி போல வாழ தொடங்கினர். அப்போது, பள்ளிக்கூடத்து சீனியரான கோகுலுடன் யாஸ்மினுக்கு பழக்கம் ஏற்பட்டது.