பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடுகள்தோறும் ஆய்வு செய்யவரும் மாநகராட்சிப் பணியாளர்களுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது
கடந்த 15 நாள்களில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 97 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள அடையாறு (27), கோடம்பாக்கம் (18), தேனாம்பேட்டை (15) ஆகிய மண்டலங்களில் கள ஆய்வுமேற்கொண்டு கொழுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. 1,260 நிரந்தரப் பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,619 பேர் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 256 மருந்துத் தெளிப்பான்கள், 167 பவர் ஸ்பிரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 479 ஸ்பிரேயர்கள், 287 கையினால் இயங்கும் புகை பரப்பும் இயந்திரங்கள், 12 சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள், 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகை பரப்பும் இயந்திரங்களைக் கொண்டு கொசுக்களைக் கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
12 ஆயிரத்து 546 வீடுகள், 99 திறந்த நிலையில் உள்ள கிணறுகள், 174 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 113 கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்கள், 102 காலி இடங்களில் கொசுப்புளு வளரிடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்றுவரை கொசுப்புழு வளரும் இடங்களைக் கண்டறிந்து கட்டடத்தின் உரிமையாளர்களுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.