தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு காவல்துறையில் 90% அலுவலர்கள் ஊழல்வாதிகள் - உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

காவல் துறையில் 90 விழுக்காடு அலுவலர்கள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக வேதனைத்தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஊழல் அலுவலர்களை நீக்கி, திறமையற்ற அலுவலர்களுக்குப் போதிய பயிற்சி வழங்க வேண்டிய சரியான தருணம் இது என கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Feb 10, 2022, 10:26 PM IST

சென்னை:நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோருக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரை விசாரித்த காவல்துறையினர், தவறானப் புகார் என புகாரை முடித்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை நாமக்கல் நீதிமன்றம் ஏற்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வசந்தி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புகார் மீது மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டது.

மறுவிசாரணை

இதன்படி, வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் பாக்கியலட்சுமி, தவறானப் புகார் என வழக்கை முடித்து வைத்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்தார். ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவின்படி மறுவிசாரணை நடத்தாமல், வழக்கை முடித்து அறிக்கை அளித்ததாகக் கூறி, பாக்கியலட்சுமிக்கு எதிராக வசந்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

இதுதொடர்பான வழக்கில் நாமக்கல் ஆய்வாளர் பாக்கியலட்சுமி தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், நில விற்பனை தொடர்பான சிவில் வழக்கு என்பதால் வழக்கை முடித்து வைத்ததாகவும், மறுவிசாரணை நடத்தப்பட்டதாகவும் வாதிட்டார்.

மேலும், தவறு செய்திருப்பதாக நீதிமன்றம் கருதினால் மன்னிப்புக்கோருவதாக நாமக்கல் ஆய்வாளர் பாக்கியலட்சுமி தரப்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் வேதனை

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வேல்முருகன், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கவில்லை எனக் கூறி, அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தார்.

நிலத்தை விற்பனை செய்தவர் உயிருடன் இருந்தபோதே விசாரித்திருந்தால் முழு உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கும் எனக்குறிப்பிட்ட நீதிபதி, தற்போது காவல்துறையில் 90 % அலுவலர்கள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளதாக வேதனைத் தெரிவித்தார்.

10 % அலுவலர்கள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளதாக கூறிய நீதிபதி, ஊழல்வாதி உள்ள அலுவலர்களை நீக்கி, திறமையற்றவர்களுக்குப் போதிய பயிற்சி வழங்க வேண்டிய நேரம் இது என தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Hijab Issue: 'ஆர்எஸ்எஸ் கலாசாரத்தை கல்வி மையங்களில் பரப்பாதீங்க!'

ABOUT THE AUTHOR

...view details