சென்னை: மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திங்கள்கிழமை வெளியிட்டார்.
அதில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 972 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 951 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மருத்துவப் படிப்பில், 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின், கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 313 இடங்கள், பல் மருத்துவ படிப்பில் 92 இடங்கள் என ஒட்டுமொத்தமாக 405 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான கலந்தாய்வு நேற்று (நவ.18) தொடங்கிய நிலையில், 20ஆம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று காலையில், இரண்டு பிரிவாக நடைபெற்ற கலந்தாய்விற்கு, 270 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 262 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். அவர்களுக்கு கராேனா பரிசோதனை செய்யப்பட்டது. 8 மாணவர்கள் கலந்தாய்விற்கு வரவில்லை.
கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களில், 224 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் இடங்களை அரசு மருத்துவக்கல்லூரியில் தேர்வு செய்துள்ளனர். 4 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பினை தனியார் மருத்துவக்கல்லூரிகளில் தேர்வு செய்துள்ளனர். 7 மாணவர்கள் அரசு பல்மருத்துவக் கல்லூரியில் இடங்களை தேர்வு செய்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முதல் நாள் கலந்தாய்வில், 235 இடங்கள் நிரப்பி உள்ளன. 27 மாணவர்கள் தங்களுக்கான இடங்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 26 அரசு மருத்துவக்கல்லூரிகளில், 25 மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் அரசு மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் முழுவதும் நிரம்பி உள்ளன. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 இடங்கள் காலியாக உள்ளன.
அதேபோல், 14 தனியார் மருத்துவக்கல்லூரிகளில், 82 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாடு அரசுப் பல் மருத்துவக் கல்லூரியில், 7 இடங்கள் நிரம்பிய நிலையில், ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில், 5 இடங்கள் காலியாக உள்ளன. 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 80 இடங்களும் காலியாக உள்ளன.