சென்னை: குழந்தைகள் உரிமைகள் மற்றும் முன்னேற்ற மையம் நடத்திய கள ஆய்வில், ஆதிதிராவிடர் பள்ளிகள் மற்றும் குழந்தைகள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆதிதிராவிடர் பள்ளிகள் எண்ணிக்கை
2016 -17, 2019 - 20 பள்ளி சேர்க்கை விவரங்களைப் பார்க்கும்போது, ஆதி திராவிடர் பள்ளிகளில் ஒரு பள்ளி மூடப்பட்டிருக்கிறது, ஒரு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாகத் தரம் குறைக்கப்பட்டுள்ளது. உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் குறைந்துள்ளது.
நடுநிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் உள்ள பகுதிகளில் தனியார் பள்ளிகளின் வருகையாலும், ஆங்கில வழிக்கல்வி இல்லாததாலும் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது கள ஆய்வின்போது தெரியவந்துள்ளது. உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாமல் போவதும் நிகழ்ந்துள்ளது.
இந்த ஊரடங்கு காலமான 2020-21இல் இந்த நிலை மேலும் அதிகரித்துள்ளது. ஆய்வுக்குழுவினர் சந்தித்த பள்ளிகள் சிலவற்றில், தனியார் பள்ளிகளிலிருந்து ஆதி திராவிடர் நலப்பள்ளிக்கு மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2016 -17 கல்யாண்டில் 98 ஆயிரத்து 39 மாணவர்களுடன் ஆயிரத்து 314 விடுதிகள் இயங்கிவந்தன. அது, 2019 - 20 கல்வியாண்டில் ஆயிரத்து 324 விடுதிகள், 98 ஆயிரத்து 539 மாணவர்களாக அதிகரித்துள்ளது. இதில், 82 ஆயிரத்து766 மாணவர்களுடன் கூடிய ஆயிரத்து 143 பள்ளி விடுதிகள் அடங்கும்.
கடந்த 2016-17 கல்வியாண்டில் 82 ஆயிரத்து 130 மாணவர்களுடன் ஆயிரத்து 143 பள்ளி விடுதிகள் இயங்கிவந்தன. இந்த இரண்டு ஆண்டுகளில் 636 மாணவர்கள் அதிகரித்துள்ளனர். அரசின் புள்ளிவிவரப்படி, இவர்களில் 10 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்தவர்கள்.
கள ஆய்வின்போது, காரை கிராம ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில், அருகிலுள்ள குருவமலைப் பகுதியிலிருந்து 10 ஆதிவாசி மாணவர்களும் பள்ளி விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஆதி திராவிடர் நலனுக்கான நிதி ஒதுக்கீடு
நடப்பு 2021 - 22 நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட் அறிவிப்பின்படி, ஆதி திராவிடர் நலத்திற்கான சிறப்புத் திட்ட நிதியான ( SC Special Component Plan) 13 ஆயிரத்து 967 கோடியில், மூன்றாயிரத்து 457 கோடி, ஆதி திராவிட குழந்தைகளின் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 12ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 16 விழுக்காடாக இருந்தது 25 விழுக்காடாக உயர்ந்துள்ளது வரவேற்க வேண்டியதாக இருந்தாலும், இந்த நிதியில், ஒன்பதாயிரத்து 858 கோடி ரூபாய், ஆதி திராவிட மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகப் பிற துறைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 34 ஆயிரத்து 181 கோடி ரூபாயில், ஆதி திராவிட மக்களுக்கான தொகையான 20 விழுக்காட்டை ஈடு செய்யும்விதமாக ஆறாயிரத்து 836 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஆதி திராவிடர் பள்ளிகள் சரியான வசதிகள் இன்றி இருப்பதால், பள்ளிக் குழந்தைகளின் வாழ்க்கை, குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தை திருமணம் உள்ளிட்ட இன்னல்களை குழந்தைகள் சந்திக்கின்றனர்.
கண்டறிந்தவைகள்
கரோனா பெருந்தொற்று, ஊரடங்கு நிலையில் அனைத்துப் பள்ளிகளின் நிலையும் பின்னடைந்து இருந்தாலும், ஆதி திராவிட நலப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு கல்வியைத் தொடர்ந்து அளிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
அரசு அறிவித்துள்ள கல்வித் தொலைக்காட்சி, குழந்தைகள் நேயமுள்ளதாக, அவர்களைச் சென்றடையும் வாய்ப்புள்ளதாக அமையவில்லை. ஆதி திராவிடர் வசிக்கும் கிராமங்களில் 70 விழுக்காட்டிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தொலைத்தொடர்பு வாய்ப்புகள் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில், பழுதடைந்த தொலைக்காட்சி, குழந்தைகளுக்குப் பொருந்தாத தொலைக்காட்சி கல்வி நேரம், ஆசிரியர் பற்றாக்குறை, ஓராசிரியர் பள்ளி போன்ற நிலைகளால் மாணவர்களைக் கல்வி சென்றடையவில்லை.
விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் அவரவர் வீடுகளுக்கு, கிராமங்களுக்குச் சென்றவுடன் என்ன நடந்தது என்ற தகவல் ஏதும் கல்வித் துறையிடமோ, பள்ளிகளிடமோ இல்லை. அவர்கள் பெரும்பாலும், குழந்தைத் தொழிலாளர்களாகவும் மாறியுள்ளனர். அது மட்டுமல்லாமல், ஆரம்பப் பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளிக்கும், நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும் சென்றுவிட்டார்களா என்ற நிலை குறித்த தகவல்கள் இல்லை.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள் பள்ளியை, பாடங்களை, ஆசிரியரை, எண்ணறிவை, எழுத்தறிவை மறந்துவிட்டனர். அனைத்து மாணவர்களுக்கும் இணைய வழி வகுப்புகளின் வாய்ப்பு வழங்கப்பட்டவில்லை. நகரத்தை ஒட்டியுள்ள பள்ளிகளிலேயே 30 விழுக்காடு மாணவர்களின் குடும்பங்களே தொலைபேசி வாங்கும் வாய்ப்பு உள்ளவர்கள். தொலை தூர கிராமங்களில் இந்த வாய்ப்புள்ளவர்கள் 10 விழுக்காட்டினரே.
தொலைக் காட்சியில் பாடம் நடத்துவது மாணவர்களை கவனித்து உற்று நோக்கி, சந்தேகங்களைத் தீர்த்து நேரடியாக உரையாடி மாணவர்களுக்கு அவை உதவவில்லை. பாதுகாப்பு உபகரணங்கள் (முகக்கவசங்கள், சானிடைசர் தடுப்பு மருந்துகள்) பள்ளியில் கொடுத்து பள்ளிகளைத் திறப்பதே குழந்தைகள் கல்வியில் நாட்டம் கொள்வதற்கும் குழந்தைத் தொழிலாளர் முறையையும் குழந்தைத் திருமணங்களையும் தடுப்பதற்கு வழி வகுக்கும்.
சில பள்ளிகளில் 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் 9ஆம் வகுப்பில் சேரவும் இல்லை மாற்றுச் சான்றிதழ் வாங்கவும் இல்லை. சிலர் இடம் பெயர்ந்தும் போய்விட்டார்கள்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஒவ்வொரு வருவாய் வட்டங்களிலும் வருவாய்த் துறை சமூகப் பாதுகாப்புத்திட்டம் என தனித்தனி வட்டாட்சியர்கள் அமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆதி திராவிடர் நலத் துறைக்கு மட்டும் இரண்டு மூன்று வருவாய் வட்டங்களை இணைத்து ஆதி திராவிடர் நலத்துறை வட்டாசியர் அலுவலகம் செயல்பட்டுவருகிறது.
இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பணியிடங்கள் கூட (வருவாய் ஆய்வாளர், இளநிலை உதவியாளர், நிலஅளவையாளர்) நிரப்பப்படாமல் உள்ளன. ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அலுவலர்கள் பலரை தொகுப்பூதியம் அடிப்படையில் பணியில் அமர்த்தியுள்ளது அரசு. இதனால் பள்ளிகளை அடிக்கடி பார்வையிடுவது முடியாமல் போகிறது.
குறிப்பாக அரசு ஆரம்பப் பள்ளிகளில் பள்ளிக் காவலர்கள் இல்லாததால் பள்ளி வளாகம் தவறான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. குழுவினர் பார்த்த பல பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றன.
இதற்கான காரணங்களாக அரசு ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் அருகில் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் அமைந்திருப்பதும் அப்பள்ளிகளில் வகுப்பறை சுற்றுச்சுவர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செவ்வனே செய்து தரப்படிருப்பதுமே. அத்துடன் இந்த ஆதி திராவிட நலப் பள்ளிகளின் அருகிலே பல தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்து அவை இயங்கி கொண்டிருப்பதும் அவற்றில் ஆங்கிலவழிக் கல்வி இருப்பதையும் முக்கிய காரணமாகக் கருதுகிறோம்.
எனவே அரசு ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு ஆதிதிராவிடர் நலத் துறையும் அரசுமே பொறுப்பேற்க வேண்டும் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.