சென்னை:தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் அண்மையில் பெறப்பட்டத் தகவல் ஒன்று இயற்கை ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; குறிப்பாக யானை காதலர்களுக்கு.
கொச்சியைச் சேர்ந்த ஒரு நபர், 2014 முதல் 2020 வரையிலான ஆறு ஆண்டுகாலத்தில் இந்தியாவில் மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கேட்ட கேள்விக்கு, 747 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
இந்திய அளவிலான இந்த எண்ணிக்கையில் நான்காவது இடத்தில் இருக்கும் தமிழ்நாடு, தென்னிந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், 68 யானைகள் மின்சாரம் பாய்ந்து கொல்லப்பட்டுள்ளன. நமக்கு அடுத்தடுத்த இடங்களில் கர்நாடகா கேரளா மாநிலங்கள உள்ளன.
களவாடப்படும் வலசை பாதைகள்
இந்த மூன்று மாநிலங்களையும் இணைத்தபடி நீளுகிறது மேற்குமலைத் தொடர். தக்காண பீடபூமியில் நீண்டு கிடக்கும் இதன் பகுதியான பந்திப்பூர், வயநாடு, நாகர்கொளேவிலிருந்து சமவெளியான கோவை, சத்தியமங்கலம் பகுதிக்கு ஆண்டு தோறும் நூற்றுக்கான யானைகள் வலசை செல்கின்றன. தற்போது இந்த பாதைகள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது சில யானைகளை எல்லை மீறச் செய்கின்றன.
யானைகள் வலசை செல்லுதல் என்பது மரபுவழிச் செயல்பாடு. ஆப்பிரிக்க காடுகளில் இருந்து, சுமார் 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மேற்கு மலைத் தொடர் பகுதிக்கு வலசையாக யானைகள் தனி இனமாக பரிணமித்துள்ளன. நாளென்றுக்கு, 140 முதல் 270 கிலோ உணவு உட்கொள்ளும் யானைகள் அதற்காக, சுமார் 16 மணி நேரம் செலவு பல கிலோ மீட்டர்களைக் கடக்கின்றன.
ஆண்டாண்டு காலமாய் நடந்து வரும் அறுபடாத இந்த இயற்கை கன்னியில் தற்போது விரிசல் விழச் செய்திருக்கிறது மனிதர்களின் பேராசை. பல நூறாண்டு காலமாய் தங்களுடைய வலசை செயல்பாடுகள் மூலமாக காடுகளை கட்டமைத்து வைத்திருந்த யானைகளிடமிருந்து சமவெளி பரப்புகளை அபகரித்துக் கொண்ட மனித இனம், யானைகளின் வலசை பாதைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. முன்னோர்களின் நினைவுப் பேழைகளின் வழியாக ஆதி தடம் தேடிவரும் யானைகளை வழிமறித்து நிற்கின்றன, யானைகளின் ஆதி முன்னோர்கள் அறிந்திராத மின்சார வேலிகள்.
உயிர்கொல்லி மின்சாரவேலி
காடுகளின் அருகில் இருக்கும் விளைநிலங்களுக்கு மின்சாரவேலி அமைப்பதை தடை செய்வேண்டும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள. இதுகுறித்து விவாசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மின்சாரவேலிக்கு பதிலாக மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்த அவர்களை பழக்கப்படுத்த வேண்டும் என வலியுறுத்தவும் செய்கின்றனர்
கடந்த சில ஆண்டுகளாக மனித - யானை மோதல்கள் அதிகரித்துள்ளன எனக் கூறும் வனவிலங்கு ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி, கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மின்வேலியில் அடிபட்டு மட்டும் 68 யானைகள் உயிரிழந்து உள்ளது. இந்திய அளவில் இந்த எண்ணிக்கை 474 ஆக இருக்கிறது. இதனால் விளைநிலங்களில் மின்சாரவேலி அமைக்க தடை விதிக்க வேண்டும் என்கிறார்.