சென்னை: ஈரோடு சென்னி மலைப்பகுதியில் ஜிடிஎல் இன்பிராஸ்டெக்சர் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் மாயமாகி உள்ளதாக காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து செயல்படாத அந்த செல்போன் டவர் கண்காணிப்பில் இல்லாதபோது, டவர் திருடப்பட்டு இருப்பதாகவும், 32 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக செல்போன் டவரை அமைத்த அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தியதில் டவர் அமைத்த நிறுவனத்திற்கு சொந்தமான 600 செல்போன் டவர்கள் மாயமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது. செல்போன் டவர் அமைக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனமானது, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சென்னையில் புரசைவாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வணிக வளாகத்தில் இதன் மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 26,000 செல்போன் டவர்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.
தமிழகத்தில் மட்டும் 6,000-க்கும் மேலான செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டு பராமரித்து வருவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த 2018 ஆம் ஆண்டு குறிப்பிட்ட தனியார் கப்பல் சேவை நிறுவனம் தங்கள் சேவையை நிறுத்தியது. இதனால், அந்த நெட்வொர்க் சேவை நிறுவனத்திற்காக இந்தியா முழுவதும் நிறுவப்பட்ட செல்போன் டவர்கள் செயல்படாமல் இருந்து வந்தன.
தமிழகத்தில் இருக்கும் செல்போன் டவர்கள் செயல்படாமல் இருந்தபோது, அதை கண்காணித்து வந்த நிறுவனங்கள், கரோனா காலகட்டத்தில் டவர் இருக்கும் இடத்திற்கு சென்று கண்காணித்து பராமரிப்பை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் செயல்படாது இருந்த செல்போன் டவர்களை வேறு நெட்வொர்க் தேவைக்காக பயன்படுத்துவதற்கு ஆய்வு மேற்கொள்ள சென்றபோது, சில மாவட்டங்களில் டவர்கள் மாயமாகி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, டவர் அமைந்திருக்கும் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட செல்போன் டவர் அமைக்கும் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.