சென்னை: நடிகர் சூர்யாவின் நீதிமன்றம் குறித்த கருத்துக்கு நீதிமன்ற அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
நடிகர் சூர்யாவின் அறிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளான கே. சந்துரு, கே.என். பாட்ஷா, டி. சுதந்திரம், து. ஹரிபரந்தாமன், கே. கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், நடிகர் சூர்யா அறிக்கை குறித்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளதைப்போல எந்த நடவடிக்கையும் எடுக்க அவசியம் இல்லை.
நான்கு மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதாகத் தெரிவித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாமென கோரிக்கைவிடுப்பது தங்களது கடமை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.