சென்னை: சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப் பிரிவின் கீழ் இயங்கி வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்படும் புகார்களையும், பதிவு செய்யப்படும் வழக்குகளையும், உரிய முறையில் விசாரித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னையில் நடந்த கிரெடிட் கார்டு மோசடி, ஆன்லைன் டிரேடிங் மோசடி உள்ளிட்ட 4 வழக்குகளில் தொடர்புடைய சைபர் குற்றவாளிகளை கண்டுபிடிக்க, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள், ராஜஸ்தான், பிகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் தீவிர புலன் விசாரணை நடத்தினர். கடந்த 15 நாள்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்குகளில் 6 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
பெருகிவரும் சைபர் குற்றங்களை திறம்பட எதிர் கொள்வதோடு, வெளிமாநில குற்றவாளிகளை கைது செய்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வோம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 600 ஆண்டுகால பழமையான மூன்று சிலைகள் மீட்பு - பின்னணி என்ன?