சென்னை:சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக மத்திய பணிமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வில் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அன்பு ஆப்ரகாம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அடையார், திருவாண்மியூர் மந்தவெளி, தாம்பரம், சைதாப்பேட்டை, கே.கே.நகர், வில்லிவாக்கம், சென்ட்ரல், வள்ளலார்நகர், திருவொற்றியூர், வியாசர்பாடி உள்ளிட்ட 16 பணிமனைகளை மேம்படுத்த உள்ளோம். இங்கு வணிக வளாகம், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருவாய் பெருகும் வகையில் கட்டமைக்கப்படும்.
தமிழ்நாடு அரசு நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அறிவித்த பின் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் வாரநாட்களில் சராசரியாக 7.5 லட்சம் பேரும், திங்கள்கிழமை சராசரியாக 8 லட்சம் மகளிர் பயணிக்கின்றனர். இதன்மூலம் 1,450 கோடி போக்குவரத்துத் துறைக்கு இழப்பு ஏற்படுகிறது. தற்போது பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 61.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய பிரச்னை
தொழிலாளர் பிரச்னை குறித்து பேச்சுவா்த்தை நடத்த குழு ஏற்படுத்தப்பட்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து கழகத்தில் புதிதாக 6000 ஓட்டுநர், நடத்துனர்களை நியமிக்க பணிகள் நடைபெற்று வருகிறது. தீபாவளி போனஸ் குறித்து நிதி துறையோடு ஆலோசிக்கப்பட்டு விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்.
டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கழகம் கடுமையாக பாதிக்கிறது. அரசு பேருந்துகளில் நாள் ஒன்றிற்கு ஒரு கோடியே 15 லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் பயணிக்கிறனர். டீசலுக்கான மானியம் அரசு வழங்கினாலும், தொடர்ந்து டீசல் விலை அதிகரிப்பதால் போக்குவரத்து துறை மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.