தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மாநகரம் அதைச் சுற்றியுள்ள புறநகா்ப் பகுதிகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
அதைப்போல் விமான பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கரோனா மருத்துவப் பரிசோதனை சான்றிதழ், வெளிமாநிலப் பயணிகளுக்கு கட்டாய இ-பாஸ் முறை போன்றவைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத் செல்லும் ஐந்து விமானங்கள், டெல்லி, கோவை, பெங்களூருவுக்குச் செல்லும் தலா மூன்று விமானங்கள், மும்பைக்குச் செல்லும் 2 விமானங்கள், மதுரை, கொல்கத்தா, கொச்சி, ராஞ்சி, அகமதாபாத், சிலிகுரி, இந்தூா், அந்தமான், கோவா உள்ளிட்ட 25 புறப்படும் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
அதைப்போல் இந்த நகரங்களிலிருந்து சென்னைக்குத் திரும்பிவரும் 25 விமானங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. எனவே இன்று ஒரேநாளில் சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் 50 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.