சென்னை: கீழ்ப்பாக்கம் மாநகரப் பேருந்துகளில் ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் திருடுபோவதாகப்போலீசாருக்கு புகார்கள் குவிந்துவந்தன. இதனால், தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த உமாபதி, சரவணன், நரேஷ் , விநாயகம், ஃபாரூக் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
செல்போன் திருட்டில் எக்ஸ்பர்ட்:அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் சென்னை மாநகரப் பேருந்துகளில் காலை நேரம் 8 மணியிலிருந்து 11 மணி வரை செல்லும் அலுவலக பயணிகளை குறி வைத்து செல்போன்களை திருடிவந்ததும். குறிப்பாக சென்னை பாரிமுனை - சி.எம்.பி.டி வழித்தடம், தி-நகர் - திருவான்மியூர் வழித்தடம், சோழிங்கநல்லூர் - கிண்டி வழித்தடத்தில் திருடுவதும் தெரியவந்துள்ளது.
போலீசாரிடம் சிக்கியது எப்படி:இவர்கள் ஒரு வழித்தடத்தில் இரண்டு மூன்று செல்போன்களை திருடிய உடன், வேறு வழித்தடத்திற்கு சென்றுவிடுவர். இந்த கும்பல் ஏறும் பேருந்தை ஆட்டோவில் வரும் கூட்டாளி பின் தொடர்வார். திருடப்படும் செல்போன்கள் ஆட்டோவில் உள்ள நபரிடம் உடனடியாக கொடுக்கப்பட்டுவிடும். அப்படி ஆட்டோவில் செல்போன் கைமாற்றப்படும்போது மாட்டிக்கொண்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்களை திருடி விற்றுள்ளனர்.