இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புவியரசன், " தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். இந்த வளிமண்டல சுழற்சி வலுப்பெறாது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.