சென்னை: தமிழ்நாட்டில் பரவிவரும் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டிவருகிறது.
இதையடுத்து தமிழ்நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்திவருகிறது.
பொதுமக்களும் ஆா்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா். இதனால் தமிழ்நாட்டிற்கு அதிகளவில் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.
எனவே தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளை அனுப்பிவைக்கும்படி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், ஜூன் மாதத்தில் ஒதுக்கீடு முடிந்துவிட்டது என்று ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு கடந்த இரு தினங்களாக தடுப்பூசிகளை அனுப்பவில்லை. இதனால், தமிழ்நாட்டில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
ஜூலை மாதத் தொகுப்பில் இருந்து 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு
இந்நிலையில் இந்த ஜூலை மாதம் ஒன்றிய தொகுப்பிலிருந்து 71 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி மகாராஷ்டிரா மாநிலம், புனேவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 34 பாா்சல்களில் சென்னை பழைய விமானநிலையம் வந்தடைந்தன.
தடுப்பூசி பாா்சல்களை தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறையினரிடம் சென்னை விமானநிலைய அலுவலர்கள் ஒப்படைத்தனா். அவா்கள் குளிா்சாதன வாகனத்தில் தடுப்பூசி பாா்சல்களை ஏற்றி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகம் எடுத்துச்சென்றனா்.
அங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அரசு அலுவலர்கள் தெரிவித்தனா்.