கரோனா தொற்றால் தமிழ்நாட்டில் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள தகவலில், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய நான்கு விமான நிலையங்களில் மார்ச் 27ஆம் தேதிவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 15 ஆயிரத்து 629 பயணிகள் வீட்டில் 28 நாள்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். பிற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த 86 ஆயிரத்து 644 பயணிகள் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் தொற்று அதிகளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 112 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.