தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் கரோனாவால் 3 பேர் பாதிப்பு’ - மா.சுப்பிரமணியம்

தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் கரோனா தொற்றால் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

டெல்டா பிளஸ் கரோனா குறித்து மா சுப்பிரமணியம், ma subramaniyam about delta plus virus
3 MEMBES AFFECTED FOR DELTA PLUS VIRUS IN TAMILNADU

By

Published : Jun 25, 2021, 4:42 PM IST

Updated : Jun 25, 2021, 9:01 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் வெண்புள்ளிகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வெண்புள்ளிகள் இயக்கம் சார்பாக, அந்நோய் குறித்த ஒரு விழிப்புணர்வு குறும்படத்தை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வெளியிட்டார்.

விழிப்புணர்வு பிரச்சாரம்

அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் அனைவருக்கும் வெண்புள்ளிகள் பாதிப்பு குறித்து முழுமையான விழிப்புணர்வு அடைந்த மாநிலம் என்ற இலக்கை தமிழ்நாடு எட்டக்கூடிய வகையிலான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

1,100இல் மூவர் பாதிப்பு

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், "பெங்களூரில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்ட 1,100 மாதிரிகளில் மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னை, கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர், மதுரையைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் மூன்று பேருக்கு தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.

ஒருவர் உயிரிழப்பு

அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இதில் மதுரையில் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நபர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது இருவருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கும் அரசு மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பு

இதுபோன்ற வைரஸ் பரிசோதனைகளை கண்டறியக்கூடிய பரிசோதனை மையங்கள் நாட்டிலேயே மொத்தம் 14 இடங்களை மட்டும் இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெங்களூருக்கு அதை அனுப்பி அதன் பின்னர் அங்கிருந்துதான் பரிசோதனை முடிவுகள் வருகின்றன.

விரைவில் சென்னையிலும்

இதனைத் தொடர்ந்து சென்னையிலேயே டெல்டா பிளஸ் உள்ளிட்ட வைரஸ் மாதிரிகளை கண்டறியக் கூடிய அதிநவீன பரிசோதனை மையங்கள் இரண்டரை கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதி ஒன்றிய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்கும்பட்சத்தில், சென்னையிலேயே அதிநவீன பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் 2,822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அதே நேரத்தில், இத்தகைய நோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் ஏழாயிரம் படுக்கைகள் மருத்துவமனைகளில் தயாராக இருக்கின்றன. எனினும், கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 50 விழுக்காடு குறைவு.

தடுப்பூசிகள் இதுவரை...

தமிழ்நாட்டில் நேற்று (ஜுன்.24) அதிக அளவாக நான்கு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை, தமிழ்நாட்டிற்கு ஒரு கோடியே 41 லட்சத்து 27 ஆயிரம் 980 தடுப்பூசிகள் வந்துள்ளது. அவற்றில் ஒரு கோடியே 32 லட்சத்து 59 ஆயிரத்து 228 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

சிறுமி சிகிச்சைக்கு நடவடிக்கை

இதன் பின்னர், நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தைச் சேர்ந்த மித்ரா என்ற சிறுமி, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சிகிச்சைக்காக 16 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு அமைச்சர், 'மருத்துவத்துறை அலுவலர்கள் இதுகுறித்து துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும்" என்றார்.

இதையும் படிங்க: பேரூராட்சிப் பகுதியில் பாதாளசாக்கடை திட்டம்: உத்தரவிட்ட அமைச்சர்

Last Updated : Jun 25, 2021, 9:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details