சென்னை:கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்த வருடம் மார்ச் மாதம் கப்பல் மூலமாக கடத்தி வரப்பட்ட 300கிலோ ஹெராயின், 5 துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்டாக்களை கடலோர பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு கடந்த மே மாதம் ஆயுதத் தடை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு இருந்தது.
தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை:இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையில் சுரேஷ், ரமேஷ் மற்றும் சௌந்திரராஜன் ஆகிய மூவர் தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டில் சென்னை உட்பட 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை நடத்தினர். குறிப்பாக சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரக்கூடிய இலங்கை தமிழரான சத்குணம் (எ) சபேசன் வீட்டில் நடத்திய சோதனையில் விடுதலை இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், சிம்கார்டுகள், 7டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அவரை கைது செய்தனர்.