"காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க. இன்னைக்கு 29ஆம் ஆண்டு தொடங்குது. இன்னும் அந்த இரவு விடியல. அரசியல் கொலையில சீரழிக்கப்பட்ட சாமானிய நிரபராதியின் துன்பத்துக்கு உதாரணமா அவன் வாழ்க்கை மாறிடிச்சு.
வெளியே நானும், உள்ளே அவனும் போராடி மருகி செத்துப்போகலாம். ஆனா காரணமானவங்கள காலம் அடையாளம் காட்டும். 161இல் அறிவு தந்த மனு மீது உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவ மதிக்காம குப்பையா நினைக்கிறவங்கதான், தீர்ப்பு தந்த நீதிபதி, வாக்குமூலம் பதிஞ்ச அதிகாரி உண்மைய சொன்னபிறகும் அறிவை குற்றவாளின்னு சொன்ன தீர்ப்ப மட்டும் மதிக்கணும்னு கூக்குரலிடறாங்க. உண்மைக் குற்றவாளிய கண்டறிய போராடாம மறைந்தவர் பெயரால அருவெறுப்பான அரசியல் செய்யறாங்க. விடுதலைக்கான வெற்று அடையாள அரசியல் சலிப்பைத் தருது. 28 ஆண்டுல சட்டத்தின் ஆட்சி என்னன்றத நல்லா பாத்துட்டேன். சட்டம், நீதிங்குறது - பணம், பதவியுள்ளவங்களுக்கு மட்டுமே உள்ள வசதியா நீடிக்கணுமா?" இது பேரறிவாளனின் தாயார் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று உருக்கமாகவும், காத்திரமாகவும் பதிவிட்டிருக்கும் பதிவு.
ஆம், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டு 29ஆவது ஆண்டு இன்று தொடங்குகிறது. இவர்களின் விடுதலைக்கு பல்வேறு தரப்பினர் அழுத்தமாக குரல் கொடுத்து தேய்ந்துபோய்விட்டனர். ஆனால், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் மட்டும் தேயாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். அரசியல் தலைவர்களை சந்திப்பது, மக்களை சந்தித்து ஆதரவு கேட்பது என அவரது கால்கள் போகாத இடங்கள் ஏதேனும் உண்டா.
கடவுள் இருக்கும் இடம் தெரிந்திருந்தால் அங்கும்கூட சென்று முறையிட்டு பார்த்திருப்பார். தள்ளாத வயதில் தனது மகனின் மிச்ச வாழ்க்கையை காப்பாற்றி தன்னருகில் வைத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கும் ஜீவன் 'அற்புதம்'. பேரறிவாளனும் சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். விசாரணை செய்த அலுவலரே, பேரறிவாளன் கூறிய வாக்குமூலத்தை முழுதாக எழுதாமல் வேண்டுமென்றே சிலவற்றை தவிர்த்தேன் என கூறியும், அவரின் விடுதலை தவிர்க்கப்படுவதற்கு என்ன காரணம் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
பேரறிவாளன் பிணையில் வரும்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் தனது வீட்டுப் பிள்ளை நமது வீட்டுக்கு வருவதாக எண்ணி கண்ணீர் வடித்தனர். ஆம், அறிவு அனைவரது வீட்டிலும் ஒரு பிள்ளையாக மாறி நாட்களாகிவிட்டன. அவர் தவறு செய்திருக்கிறார் செய்யவில்லை என்ற வாதத்துக்குள் செல்ல வேண்டாம். அப்படிச் சென்றால் அது அரசியல், அரசியலுக்குள் அரசியல், என பயணித்துவிடும். அப்படி பயணித்தால் இங்கு பலர் கூண்டில் நிற்க வேண்டிவரும். இப்போதைய ஒரே கேள்வி, இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்த பிறகும் பேரறிவாளன் வெளியில் வராததற்கு என்ன காரணம், எது தடுக்கிறது?
நளினி தனது மகளின் திருமணத்திற்குக் கூட செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். பெற்ற மகளின் திருமணத்திற்கு செல்ல முடியாத நிலையை திரைப்படத்தில் காட்டினாலே கண் கலங்கும் இரக்க குணம் படைத்த சமூகத்தில்தான் உண்மையிலேயே ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு போக முடியாத நிலையில் இருக்கிறார். முருகனோ தன்னை 'கருணைக் கொலை செய்துவிடுங்கள்' என கதறுகிறார். ஒரு உயிரே தன்னை கொன்றுவிடு என இறைஞ்சுவதெல்லாம் எவ்வளவு பெரிய அவல நிலை.
உலகிலேயே மிகப்பெரிய கொடுமை என்னவெனில் உறவுகள் இருந்தும் தனிமையில் இருப்பதுதான். குறிப்பாக தந்தை, தாய் இருந்தும் அவர்களை காணமுடியாமல் 20 வருடங்களுக்கும் மேலாக ஒருவர் தனியாக இருப்பது என்பது எதிரிக்கும் சரி, துரோகிக்கும் சரி வந்துவிடக் கூடாத நிலைமை. அநாதையாய் இருப்பதைக் காட்டிலும் பெரிய வலி அது. கணவன், மனைவி, குழந்தை என்பதுதான் நமது சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பு. ஆனால், தனது மகளின் திருமணத்திற்கு போக முடியாமல் ஒரு தம்பதி வெதும்பி கொண்டிருக்கிறது.
மனிதம் அதிகம் பேசும் இந்தியா, மனிதாபிமானம் அதிகம் உள்ள இந்தியா என பேசி என்ன பயன். ஏழு பேர் இன்னும் சிறையில்தானே இருக்கிறார்கள். ஒரு நாட்டின் பிரதமர் கொல்லப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதுதான். ராஜீவும் ஒரு உயிர்தான் அந்த உயிரை எடுக்க யாருக்கும் உரிமை இல்லைதான். ஆனால் இந்த வழக்கில் விசாரணை சரியான திசையில் பயணிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இன்றளவு வரை வைக்கப்பட்டுத்தானே வருகிறது. தந்தையை இழந்த ராகுல், 'பேரறிவாளன் உட்பட ஏழு பேரை மன்னித்துவிட்டோம்' என்கிறார். அதெல்லாம் இல்லை சட்டப்படிதான் நடப்போம் என்று வரட்டுவாதம் இங்கு வேண்டாம். ஏனெனில் இங்கு அனைவரும் சட்டத்தின்பால் சமமாக அணுகப்படுகிறார்களா என்றால் யாரிடமும் பதில் இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கு 28 ஆண்டுகள் ஓடி 29ஆவது ஆண்டு தொடங்கிவிட்டது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இது வெறும் எண்தான். ஆனால் இந்த எண்களுக்குள்தான் வாழ்க்கையில் முக்கால்வாசி ஆயுள் அவர்களுக்கு முடிந்திருக்கிறது. குறிப்பாக பேரறிவாளன் நிலைமை இன்னும் மோசம். திருமணம் துறவு நிலை, உறவுகள் துறவு நிலை, நண்பர்கள் துறவு நிலை என அவர் இழந்ததை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. வேண்டாம் போதும் அவர்கள் சிறையில் அனுபவித்தது, வெளியில் அனுபவிக்காதது போதும்.