சென்னையிலிருந்து சிங்கப்பூா் வழியாக ஆஸ்திரேலியா செல்லும் சரக்கு விமானம் நேற்று (பிப். 4) இரவு சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அதில் ஏற்றவந்த பாா்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பரிசோதித்து அனுப்பிக்கொண்டிருந்தனா்.
அப்போது ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்காக 3 அட்டைப்பெட்டி பாா்சல்கள் வந்திருந்தன. அதில் தலைவலி போன்ற வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சுங்கத் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அட்டைப்பெட்டிகளைத் திறந்து பாா்த்து சோதனையிட்டனா். அட்டைப்பெட்டிகளின் மேல்பகுதியில் மட்டுமே வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தன. உள்ளே பாா்சல், பாா்சலாக எபிட்டிரீன் என்ற ஒருவகை போதை மாத்திரைகள், போதை பவுடா்கள் இருந்தன. இதையடுத்து அவற்றை அலுவலர்கள் பறிமுதல்செய்தனா்.
இந்தப் போதை மாத்திரை, பவுடா் சுமாா் 24 கிலோ இருந்தன. அதன் மதிப்பு சுமாா் ரூ.2.5 கோடி ஆகும். போதை மாத்திரைகள், பவுடரை பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பியுள்ளனா். ஆய்வின் முடிவில்தான் எந்த வகையான போதை மாத்திரை, பவுடா் என்பதும் அதன் முழு மதிப்பு எவ்வளவு? என்ற விவரங்கள் தெரியவரும்.
இதற்கிடையே சுங்கத்துறையினா், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அட்டைப்பெட்டிகளில் இருந்த முகவரி, போன் நம்பா்கள் போலியானவை என்று தெரிவந்துள்ள நிலையில், அவைகளை எந்த ஏஜென்சி பதிவு செய்து அனுப்பியது என்று விசாரணை மேற்கொண்டனர்.