அண்ணா பல்கலைக்கழகத்தில் வானூர்தி துறை மூலம் ஆளில்லா விமானங்கள் தயார் செய்யப்பட்டு, பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து, அண்ணா பல்கலைகழகத்தின் வானூர்தி துறை செயல்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும்நிலையில், வைரஸ் தொற்று உள்ள பகுதிகளிலும், குறுகியப் பகுதிகளிலும் ஆளில்லா விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவருகிறது. தற்போது நான்கு ஆளில்லா விமானங்கள் மட்டுமே உள்ளதால் அதனை கூடுதலாக உருவாக்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் வானூர்தி துறை தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் தயார் செய்யப்பட்ட ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, கடந்த 12 நாட்களாகக் கிருமிநாசினிகள் தெளித்து வருகின்றோம்.