சென்னை: கே.கே.நகரில் 23-ஆவது மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்," தமிழ்நாட்டில் இன்று(மார்ச்.05) 23-ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 3,72,41,003 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 16 முதல், போடப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 10,00,30,346 ஆக உள்ளது.
முதல் தவணை தடுப்பூசி 91.54% பேரும், 2ஆம் தவணை தடுப்பூசியை 72.62% பேரும் செலுத்தியுள்ளனர். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 71% பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை 8,45,289 பேர் செலுத்த தகுதியானவர்களாக உள்ளனர்.
அதில் 6 லட்சம் பேர் செலுத்தியுள்ளனர். மேயரை அழைக்கும் பொழுது, வணக்கத்திற்குரிய என்று அழைக்க வேண்டும். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் வணக்கத்திற்குரிய என்ற வார்த்தையை நீக்கி, சென்னை மேயரை மாண்புமிகு என்று அழைக்க வேண்டும் என மாற்றினர்.
அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு மேல் யாரும் இருக்க கூடாது என்று நினைத்து, மாண்புமிகு என அரசாணை வெளியிட்டார். மேயருக்கு பல சிறப்பு அதிகாரங்கள் உள்ளது. தபேதார் என்ற பட்டம் பல உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.