இதுபற்றி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் எஸ். காந்தி கூறுகையில், "மின் வாரியம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இதில் 30 ஆயிரம் கோடி ரூபாயை மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த நிலையிலும்கூட , இனி மின்சாரம் வாங்க வேண்டிய தேவையில்லாத நிறுவனத்திற்கு 2,340 கோடி ரூபாயை மின்வாரியம் அள்ளித்தர ஒப்புக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு பகுதியையும் வழங்கிவிட்டது.
மின்வாரியத்தின் ஊழல்
மின்வாரியத்தின் உயர் மட்டத்தில் நடந்துள்ள மிகப் பெரும் ஊழல் இதுவாகும். பிள்ளைப் பெருமாள் நல்லூர் (பி.பி.என்) என்ற நிறுவனத்திடம் மின்சாரக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிலையத்தின் மின்சார விலை என்பது யூனிட் 17.78 ரூபாயிலிருந்து 21.80 ரூபாய் வரையிலும்கூட வாங்கப்பட்டிருக்கிறது. 2001ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரையிலான காலத்தின் இடைப்பட்ட 12 ஆண்டுகளில் 1,725 கோடி யூனிட்கள், 20 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டிருக்கிறது. அதாவது யூனிட் 11.60 ரூபாய்க்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.