சென்னை: இதுவரையில் 8,700 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சேர்த்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கான 31.4 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தாங்கிய இரண்டாவது தொடர்வண்டி, ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து நேற்று (மே.15) காலை திருவள்ளூர் மாவட்டம் வந்து சேர்ந்தது.
தமிழ்நாட்டுக்கு ரயில் மூலம் 111.4 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது. மூன்றாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ஜார்க்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து இரண்டாவது டேங்கர்களில் 40 டன் ஆக்சிஜனுடன் இன்று தமிழ்நாடு வருகிறது. 4ஆவது ஆக்சிஜன் தொடர்வண்டி, ரூர்கேலாவில் இருந்தும், 5ஆவது வண்டி ஒடிசா மாநிலம், கலிங்கநகர் டாடா தொழிற்சாலை ரயில்வே சரக்குப் பிரிவில் இருந்தும் கிடைக்கவுள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, தெலங்கானா, ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் அனுப்பியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் பட்டியலிட்டுள்ளது.