சென்னை: தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் 2023 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி, மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய விளம்பரப்பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, எதிர்வரும் 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மக்காச்சோளம் தவிர்த்து, இதர சிறுதானியங்கள் உற்பத்தியை உயர்த்தவும், பயன்பாட்டினை அதிகரிக்கவும், பல்வேறு வகையான விளம்பரப் பணிகளை மேற்கொள்வதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை துறையின் அனைத்து தலைவர்கள், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு , பள்ளிக் கல்வி, உயர் கல்வி, சமூக நலம். ஊரக வளர்ச்சி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு போன்ற துறைகள் மூலமாக 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களுக்கு மாதாந்திர வாரியாக செயல்படுத்தப்பட வேண்டிய தொழில்நுட்பம் மற்றும் விளம்பரப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.