2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. 1984ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ்நாட்டில் ஆளும் கட்சி மீண்டும் வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது.
அதேசமயம் இந்தத் தேர்தலில்தான் திமுகவும் பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. தேர்தல் முடிவுக்குப்பின் திமுக கூட்டணி 98 உறுப்பினர்களுடன் வலிமையான எதிர்க்கட்சியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தது. அதன்பின்னர் ஜெயலலிதாவின் மறைவு, 18 எம்எல்ஏக்களின் ராஜிநாமா, கருணாநிதியின் மறைவு என பல அரசியல் மாற்றங்கள் நிகழவே, கடந்த மக்களவைத் தேர்தலுடன், காலியாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் 13 இடங்களை திமுக கைப்பற்றி தனது பலத்தை 89இல் இருந்து 101ஆக உயர்த்திக் கொண்டது.
இதனால் ஆளும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து எதிர்க்கட்சியான திமுகவின் எண்ணிக்கை பலம் அதிகரித்தது. அதன்பின்னர், விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதால் திமுக ஒரு தொகுதியை இழந்தது. இதையடுத்து அக்கட்சியின் பலம் 100ஆக குறைந்தது.
2020ஆம் ஆண்டு தொடங்கியவுடனே திமுகவுக்கு தொடர் இழப்புகள் ஏற்படத் தொடங்கின. பிப்ரவரி மாதத்தில் குடியத்தம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து திருவொற்றியூர் தொகுதி திமுக உறுப்பினர் கே.பி.பி. சாமியும் காலமானார். இதையடுத்து இரண்டு தொகுதிகள் காலியாகின.
தற்போது, சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி திமுக சட்டப்பேரவை உறுப்பினரான ஜெ.அன்பழகனும் கரோனாவால் உயிரிழந்துள்ளார். இவர், இந்தியாவில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் சட்டப்பேரவை உறுப்பினர்.