சென்னை: வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் முதல் வாரத்தில், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் அமர்வில் இன்று (டிசம்பர் 18) விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சண்முகம் ஆஜராகி, 4 நாட்கள் போராட்டத்துடன் இது முடிந்துவிடவில்லை என்றும், கிராம நிர்வாக அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் என வன்னியர் சங்கங்கள், பாமக திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே நடந்த போராட்டத்தில் ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக காவல்துறை வழக்கு மட்டுமே பதிந்துள்ளதாகவும், முன்னெச்சரிக்கை கைது ஏதும் செய்யவில்லை எனவும் வாதிட்டார். நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீடு கோரி இரண்டு நாட்களுக்கு முன் உயர் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்ததாகவும் வாராகி தரப்பில் வாதிடப்பட்டது.