சென்னை வடக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பர்மா பஜாரில் நீண்டநேரமாக சுற்றிக் கொண்டிருந்த இருவரை கண்காணித்த வடக்கு கடற்கரை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப்பின் முரணான பதிலளித்த அவர்களிடமிருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் சுமார் ஆறுலட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 டெல் நிறுவன மடிக்கணினிகள் இருப்பது தெரியவந்தது.
காவல் துறையினரின் விசாரணையில் அந்த நபர்கள் குஜராத்தைச் சார்ந்த முகமது யூனுஸ் (40), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சையது அமீன் ரகுமான் (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினிகள் ரசீது இன்றி கொண்டுவரப்பட்டது என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து வடக்கு கடற்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.