சென்னை:தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா உள்ளது. அதில் ஏராளமான அரியவகை விலங்குகள், பறவைகள் உள்ளன. கரோனா பரவல் காரணமாக சமீபகாலமாக உயிரியல் பூங்கா மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆண்அணில் குரங்குகள்
2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து சென்னை விமான நிலையத்திற்குக் கடத்திவரப்பட்ட இரண்டு ஆண் அணில் குரங்குகள் பறிமுதல்செய்யப்பட்டன. அதனை அலுவலர்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டு பராமரிக்கப்பட்டுவருகிறது.
பூங்காவில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்ட இருப்பிடத்தில் இரண்டு ஆண் அணில் குரங்குகளும் மக்கள் பார்வைக்காக விடப்பட்டிருந்தன.
சந்தேக நபர்கள் கைவரிசை
இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உயிரியல் பூங்காவில் இருந்த இரண்டு ஆண் அணில் குரங்குகளும் காணாமல்போயின. மேலும் அலுவலர்கள் சோதனை செய்தபோது, அணில் குரங்குகள் அடைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியை வெட்டிவிட்டு இரண்டு அணில் குரங்குகளையும் அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து உயிரியல் பூங்கா ஊழியர்கள் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், பூங்கா வனசரக அலுவலர்கள் ஓட்டேரி காவல் நிலையத்தில் அரியவகை அணில் குரங்குகள் திருடுபோனது குறித்து புகார் அளித்துள்ளனர்.