சென்னையில் ஆர்.ஏ. புரம் ராஜா தெருவில் உள்ள ராஜா வம்ஷ் என்ற அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே உள்ள சாலையில் பழுதுபார்க்க வந்த ஆட்டோக்கள் நிற்க வைக்கப்பட்டிருப்பது வழக்கம். இந்த நிலையில் திடீரென்று அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு ஆட்டோக்கள், திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளன.
அப்போது புகை அதிகமாக வந்ததால் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்த மோகன், ஆட்டோக்கள் எரிவதைக் கண்டு உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதனடிப்படையில் மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் இரண்டு ஆட்டோக்களும் முழுவதுமாக எரிந்து நாசமாகின. இந்த விபத்து தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஆட்டோ தீப்பற்றி எரிந்தது தெரியவந்துள்ளதாகக் காவல் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.