சென்னை: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு (Revision Exam) இன்று (பிப். 9) முதல் வரும் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. காலையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மதியம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மூன்று மணி நேரம் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.
அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள கால அட்டவணையை பின்பற்றி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மாணவர்கள் வினாத்தாளைப் படிப்பதற்கும், அதனைப் பூர்த்தி செய்வதற்கும் 15 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் தேர்வு தொடங்கி நடைபெறுகிறது.
தேர்வு எழுதும் 17 லட்சம் மாணவர்கள்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 4 லட்சத்து 40 ஆயிரத்து 826 மாணவிகளும், 3 லட்சத்து 99 ஆயிரத்து 495 மாணவர்களும் என 8 லட்சத்து 40 ஆயிரத்து 321 பேர் எழுத உள்ளனர். அதேபோல், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 4 லட்சத்து 68 ஆயிரத்து 589 மாணவிகளும், 4 லட்சத்து 86 ஆயிரத்து 877 மாணவர்களும் என 9 லட்சத்து 55 ஆயிரத்து 476 பேர் எழுத உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வில் சுமார் 17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். சென்னை மாவட்டத்தில் 50 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வு முடிந்த பின்னர், பொதுத்தேர்வு நடைமுறையின் வழிக்காட்டுத்தல்படி விடைத்தாளை திருத்தும் பணிகள் நடைபெறுகிறது.
இதையும் படிங்க: 10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வில் மதிப்பெண்ணில் தவறு ஏற்பட்டால் தலைமை ஆசிரியரே பொறுப்பு!