சென்னை சௌகார்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுமர் சிங்(22), காஜல்(18) இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த மாதம் 10ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் தற்கொலைக்கு முயன்றதில் காஜல் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, காதலன் சுமர் சிங் உயிர் தப்பியுள்ளார்.
இது குறித்து திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வந்தனர். காஜல் தற்கொலைப் பற்றி சுமர் சிங்கிடம் பெற்ற தகவலில் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளது. மேலும் இறந்துபோன காஜலின் உடற்கூறு ஆய்வறிக்கையில் அவர் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்ததையடுத்து, சுமர்சிங் கைது செய்யப்பட்டார்.
அதனையடுத்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுமார் சிங்கும், காஜலும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் காஜல் வீட்டில் அவருக்கு வேறு ஒருவருடன் கடந்த மூன்று மாதங்கள் முன்பு நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத காஜல், நாம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என பலமுறை சுமர் சிங்கிடம் கூறியுள்ளார். இதில் துளியும் விருப்பம் இல்லாத சுமர் சிங், காதலி வற்புறுத்தியதால், சயனைட் வாங்க முயன்று, தான் ஒரு தங்க நகை வியாபாரம் செய்து வருவதாகவும், தங்கத்தை கரைப்பதற்காக சயனைட் தேவைப்படுவதாக என பொய் சொல்லி சுமார் அரை கிலோ சயனைட் வாங்கினார்.
பின்னர் திட்டப்படி இருவரும் கடந்த மாதம் 10ஆம் தேதி திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி குளிர்பானத்தில் சயனைட்டை கலந்து இருவரும் குடிக்க முடிவு செய்து, அதில் காதலி காஜல் மட்டும் முழுவதுமாக குடித்துள்ளார்.
ஆனால் சுமர் சிங் குடிப்பது போல நடித்து குடிக்காமல் இருந்துள்ளார். இதனை கவனித்த காஜல் இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் சயனைடைக் குடித்ததால் காஜலுக்கு உடல் விட்டு விட்டு இழுத்துள்ளது, இதனால் பயந்து போன சுமர் காஜல் உயிர் பிழைத்துவிட்டால் மீண்டும் தம்மை தற்கொலை செய்து கொள்ள கூறி முயற்சிப்பார் எனக் கருதி, துப்பட்டாவால் காஜல் கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதையடுத்து காதலியை கொலை செய்த குற்றத்துக்காக சுமர் சிங் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
காதலர்கள் தங்கியிருந்த லாட்ஜ்