தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை நிகழ்வுகள் குறித்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னையிலுள்ள மாநிலத் தகவல் ஆணையத்தில், ஆணையர் முத்துராஜ் முன்னிலையில் இன்று நடந்தது. அதில் ஆஜரான கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் குற்றங்கள் நடந்திருப்பதாகத் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த 2000 முதல் 2019ஆம் ஆண்டு வரை பள்ளி மாணவிகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறை நிகழ்வுகள் எத்தனை என்றும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது உள்ளிட்ட எட்டு தகவல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முருகேஷ் என்பவர் பள்ளிக்கல்வித் துறையிடம் கேட்டிருந்தார்.
ஆனால், கல்வித்துறை உரிய பதிலளிக்கவில்லை எனக்கூறி சென்னையில் உள்ள மாநிலத் தகவல் ஆணையத்தில் முருகேஷ் மேல் முறையீடு செய்திருந்தார். இதுதொடர்பான விசாரணை, தகவல் ஆணையர் முத்துராஜ் முன்னிலையில் இன்று வந்தது. இதில், பள்ளிக்கல்வித் துறை துணை இயக்குநர் ஆறுமுகம் உள்ளிட்ட சில அதிகாரிகளும், தனியார் பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பள்ளிக்கல்வித் துறை தரப்பில் கடந்த 19 ஆண்டுகளில் 171 பாலியல் வன்முறை நிகழ்வுகள் தமிழ்நாடு முழுவதும் நடந்திருப்பதாக ஆவணங்களைத் தாக்கல் செய்தனர். அதில், கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரையில் 164 பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றுள்ளது எனவும், 2017ஆம் ஆண்டில் 15 குற்றங்களும், 2018ஆம் ஆண்டில் 35 குற்றங்களும், 2019ஆம் ஆண்டில் 35 குற்றங்கள் என அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளிகள் சட்டப் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மனோகரன் ஜெயக்குமார் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், ”தமிழகத்தில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை குறைக்கும் வகையில், இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் விபரத்தை கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பொது மக்கள் பார்வையிடும் வகையில் பதிவிட வேண்டும். இதனால் குற்றவாளிகள் வேறுப் பள்ளியில் பணியில் சேராத வகையில் தடுக்கப்பட வாய்ப்புள்ளது.
குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் விபரத்தை இணையத்தில் பதிவிட வேண்டும் தனியார் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு, பணிப்பதிவேடு கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பராமரிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். இதுபோன்றவைகளை தடுக்க பள்ளிக் கல்வித்துறைச் செயலாளருக்கு உரிய பரிந்துரை அனுப்புவதற்கு ஆணையம் முடிவு செய்திருக்கிறது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: சிறுமிகளிடம் அத்துமீறி நடந்த அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது