சென்னை: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெற்றது. உலகின் 36 நாடுகளில் இருந்து ஈழத்தமிழர்கள் இணைய வழியாக பங்கேற்றனர். தமிழ்நாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இணைய வழியாக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
சென்னை தியாகராயநகர் பென்ஸ்பார்க் ஹோட்டலில் நிகழவிருந்த இந்தக் கூட்டம், அங்கு கடைசி நிமிடத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் மயிலாப்பூரில் உள்ள திராவிடர் விடுதலைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. 50-க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
'சுப்பிரமணியன்சுவாமியின் நண்பர்கள் இந்த நிகழ்வை நடத்தவிடவில்லை': கூட்டத்தில் பங்கேற்ற நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவை உறுப்பினர் தமிழினியன், 'இது ஒரு நல்ல நாள். இந்த நாள் ஏற்கெனவே நல்ல நாள் தான். அதனால் தான் சுப்பிரமணியசுவாமியின் நண்பர்கள் இந்த நிகழ்வை நடத்தவிடவில்லை. சவுக்கு சங்கர் கூறியதால் காவல் துறை இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை. பரவாயில்லை. பேரறிவாளன் விடுதலை நடக்கவே நடக்காது என்றார்கள். அற்புதம் அம்மாளும், உலகத்தமிழ் சொந்தங்களும் நீதியின் பால் கொண்ட நம்பிக்கையால்தான் விடுதலை சாத்தியமாகியது’ என்றார்.
இணைய வழியாக பங்கேற்ற, நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர், உருத்திர குமாரன் பேசுகையில், '31 ஆண்டுகளாக சிறையில் வாடிய பேரறிவாளனின் விடுதலை நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்பின் தொடர்ச்சியாக மற்ற 6 தோழர்களும் விரைவில் விடுதலையாவார்கள் என்று நம்புகிறோம்’ என்றார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் நடத்திய 17 பேர் ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும்: இணைய வழியாக பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், "2009 மே 16ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மவுனிக்கிறோம் என்று சொன்னார்கள். வழிமுறைகளை மாற்றுகிறோம் என்று தேசியத் தலைவர் பிரபாகரன் சொன்னார். அப்படியான மாற்று முறை தான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம். ஒரு அரசு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முன்மாதிரியான ஒரு அரசாக பிரபாகரனின் அரசு இருந்து வந்தது.
லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இதற்கு நீதி வேண்டும். சுதந்திர தமிழீழம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது. ஆனால், வல்லரசு நாடுகள் தங்கள் சுயலாபத்திற்காக சிங்களர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து ஈழம் அமையாமல் தடுக்கிறார்கள். ஆயுதம் இன்றி தமிழ் ஈழம் அமைந்தே தீரும்.
ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டும் தான் ஈழத்தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும். இதை ஆரம்பம் முதல் சொல்லி வருபவன் நான் மட்டும் தான் என்ற பெருமிதம் எனக்கு உண்டு. முத்துக்குமார் உள்ளிட்ட 18 பேர் தங்களைத் தீயில் தள்ளிக் கொண்டு ஈழத்திற்காக மாண்டார்கள். தமிழீழ விடுதலைக்கு எந்தெந்த வகையில் பக்கபலமாக இருக்க வேண்டுமோ அந்தந்த வகையில் பலமாக இருப்போம். சுதந்திர தமிழீழம் அமைய பாடுபடுவோம்’ என்று பேசினார்.
கூட்டம் முடிவதற்கு சிறிதுநேரம் முன்பாக அங்கு வந்த காவல் துறையினர் கூட்டத்தை நடத்த அனுமதி இல்லை எனக் கூறி கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் சரஸ்வதி உள்ளிட்ட 4 பேர் மற்றும் பங்கேற்றவர்களில் தமிழ்தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த செந்தில் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.
ஜனநாயக உரிமை மறுத்து அராஜகத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினரைக் கண்டித்து கைது செய்யப்பட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் சிறிது நேரம் கழித்து விடுவிக்கப்பட்டனர். உலகெங்கும் வாழும் தமிழர்கள் எவ்விதப் பிரச்சனையும் இன்றி இக்கூட்டத்தில் பங்கேற்கும் நிலையில், தமிழ்நாட்டில் இப்படி தடை விதிக்க இது சிங்கள அரசா என்று கேள்வி எழுப்பி காவல் துறைக்கு கண்டனத்தை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'இலங்கை அதிபராக யார் வந்தாலும் ஈழ தமிழர்களுக்கு விரோதமாகவே இருப்பார்கள்' - வைகோ