சென்னை:தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர், நான்காவது நாளாக இன்று நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக, சென்னை - கலைவாணர் அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தொடரை, மரபுப்படி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடங்கி வைத்தார்.
முதலாவது நாளும் முக்கிய அம்சங்களும்:
ஆளுநர் தனது முதல் நாள் உரையில், நீட், வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்துசெய்தல், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை, இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை, நிதித் துறை வல்லுநர்கள் அடங்கிய குழு, 15 நாள்களில் ஸ்மார்ட் கார்டு எனப் பல்வேறு முக்கிய அம்சங்களை அறிவித்தார். 'மாநிலங்களுக்கு சுயாட்சி' என்கிற இலக்கினை அடைய அரசு உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
இரண்டாவது நாளில் இரங்கல் தீர்மானம்:
இரண்டாவது நாள் கூட்டத்தொடரில் மறைந்த நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், டி.எம்.காளியண்ணன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதிபடத் தெரிவித்தார்.
'ஓஎன்ஜிசி-க்கு அனுமதி அளிக்கமாட்டோம்':
சட்டப்பேரவையில், தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்தார்.
அரியலூர், கடலூரில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்க ஒன்றிய அரசிடம் ஓஎன்ஜிசி அளித்த விண்ணப்பம் தமிழ்நாடு அரசால் நிராகரிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிபடத் தெரிவித்தார்.