சென்னை:தேசிய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து 165 கேள்விகள் இடம் பெற்றதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் நேற்று (செப்.12) நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றத் தேர்வினை எழுதிவிட்டு வந்த மாணவர்கள் தேர்வில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் அதிகளவில் வந்ததாக தெரிவித்திருந்தனர்.
கேள்விகள் விளக்கம்
மேலும் கரோனாவால் முதல்முறையாக மாணவர்களுக்கு கூடுதலாக வினாக்கள் அளிக்கப்பட்டு தெரிந்த வினாக்களை எழுதவும் வாய்ப்பு வழங்கப்பட்டன. 180 கேள்விகளுக்கு பதிலாக 200 கேள்விகள் அளிக்கப்பட்டன.
மேலும் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் இருந்து 200க்கு 165 கேள்விகள் இடம் பெற்றிருக்கிறது. அதன்படி, இயற்பியல் பாடத்தில் 50க்கு 48 கேள்விகள் இடம்பெற்று இருந்தன. அவற்றில் 12 கேள்விகள் எளிதாகவும், 19 கேள்விகள் சற்று சிந்தித்து எழுதும் வகையிலும், 19 கேள்விகள் மிகவும் கடினமாகவும் இருந்தன.